புதிய வேளாண் சட்டங்கள்: ஜன.11-இல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் வரும் 11-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் வரும் 11-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தில்லியில் கடந்தாண்டு நவம்பர் 26 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையிலான 7 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதனிடையே வேளாண் துறையை பொதுப் பட்டியலில் இணைப்பதற்காக 1954-இல் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல். சர்மா மனுத் தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்தமே புதிய வேளாண் சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அனுமதியளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆகியோர் பதிலளித்தனர்.

மேத்தா சமர்ப்பித்த பதில் மனுவில், "புதிய வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே ஆரோக்கியமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், வழக்கு விசாரணையை உடனடியாகக் கையிலெடுப்பது உகந்ததாக இருக்காது" என்று குறிப்பிட்டிருந்தார்.

வேணுகோபால் சமர்ப்பித்த பதில் மனுவில், "இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

தலைமை நீதிபதி பாப்தே தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்தது. மேலும் பேச்சுவார்த்தையையே ஊக்குவிக்கவே விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை திங்கள்கிழமை (ஜனவரி 11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர்.

மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையிலான 8-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com