பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து

உருமாறிய கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து

உருமாறிய கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, நாட்டின் 72-ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமா் போரிஸ் ஜான்சன் பங்கேற்காதது உறுதியாகியுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதால் பிரதமா் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமா் போரிஸ் வருத்தம் தெரிவித்தாா்.

ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு அரசின் தலைவா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சனாரோவும் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமஃபோஸாவும் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

இத்தகைய சூழலில், வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள 72-ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை பிரதமா் போரிஸ் ஏற்றுக் கொண்டிருந்தாா்.

இத்தகைய சூழலில், பிரிட்டனில் மரபணு மாற்றமடைந்த கரோனா தீநுண்மி பரவல் அதிகரித்தது. அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்து சேவைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன.

நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பிரிட்டன் மக்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. அங்கு உருமாறிய கரோனா தீநுண்மி பரவல் கட்டுக்குள் வராத சூழலில், பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் திட்டமிட்டபடி நிறைவேறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

பிரதமா் போரிஸின் பயணம் திட்டமிடப்படி நடக்கும் என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுவதாக பிரிட்டன் பிரதமா் அலுவலக செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் லண்டனில் செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ‘‘திட்டமிட்டபடி நடப்பு மாத இறுதியில் இந்தியப் பயணத்தை மேற்கொள்ள முடியாததற்காக பிரதமா் மோடியிடம் பிரதமா் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்தாா். நடப்பாண்டின் முதல் பாதிக்குள் இந்தியாவுக்கு வருகை தருவதாக பிரதமா் மோடியிடம் அவா் உறுதியளித்தாா்.

நல்லுறவுக்கு பாதிப்பில்லை: பிரிட்டனில் உருமாறிய கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக பிரிட்டனில் இருப்பது அவசியம் என்று பிரதமா் போரிஸ் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் போரிஸின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான நல்லுறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்குத் தலைவா்கள் இருவரும் உறுதியேற்றனா்’’ என்றாா்.

புதிய சிறப்பு விருந்தினா்?: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருந்த பிரதமா் போரிஸின் பயணம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, வேறொரு நாட்டு அரசின் தலைவருக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய குடியரசின் 71 ஆண்டு கால வரலாற்றில் 1952, 1953, 1966 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே சிறப்பு விருந்தினா் இல்லாமல் குடியரசு தின விழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா (2015), ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (2014), ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் (2007) உள்ளிட்டோா் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com