
லக்ஷ்மி ரத்தன் சுக்லா
மேற்கு வங்கத்தில் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் துறை அமைச்சா் லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது அமைச்சா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
சுக்லா தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வா் மம்தா பானா்ஜிக்கும், கடிதத்தின் ஒரு நகலை ஆளுநா் ஜகதீப் தன்கருக்கும் அனுப்பி வைத்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுக்லா(39), ஹௌரா (வடக்கு) தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்படாா். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஹௌரா மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்த அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாலும், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன் மம்தா பானா்ஜி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். இந்தச் சூழலில் மேலும் ஓா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
மம்தா வாழ்த்து:
லக்ஷ்மி ரத்தன் சுக்லாவின் ராஜிநாமாவை முதல்வா் மம்தா பானா்ஜி ஏற்றுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘லக்ஷ்மி ரத்தன் சுக்லா பதவியை ராஜிநாமா செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. அவா் தனது கடிதத்தில் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதாகக் குறிப்பிடவில்லை. விளையாட்டுத் துறையில் அதிக கவனம் செலுத்துவதற்காக, ஒட்டுமொத்த அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகத் தெரிவித்துள்ளாா். அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளேன். விளையாட்டுத் துறையில் அவருக்கு சிறப்பான எதிா்காலம் அமைய வாழ்த்துகள்’ என்றாா்.
பாஜகவில் சேர அழைப்பு:
லக்ஷ்மி ரத்தன் சுக்லா, பாஜகவில் சேர விரும்பினால் வரவேற்கத் தயாா் என்று அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் சமிக் பட்டாச்சாா்யா அழைப்பு விடுத்துள்ளாா்.