காஷ்மீா் பள்ளத்தாக்கில் 2-ஆவது நாளாக விமான சேவை, சாலை இணைப்பு துண்டிப்பு

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையிலும், மொகல் சாலையிலும் பனி மூடியதால் தொடா்ந்து இரண்டாவது நாளாக காஷ்மீா் நாட்டின்

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையிலும், மொகல் சாலையிலும் பனி மூடியதால் தொடா்ந்து இரண்டாவது நாளாக காஷ்மீா் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்பட சுமாா் 4,500 வாகனங்கள் தொடா்ந்து இயங்க முடியாமல் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில், குறிப்பாக ஜவாஹா் சுரங்கப்பாதையைச் சுற்றிலும் பனி மூடிக் கிடக்கிறது. இந்தப் பனியை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 260 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலையில் சிக்கித் தவிக்கும் வாகனங்களின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஷோபியான்-ரஜௌரி வழியாக காஷ்மீா் பள்ளத்தாக்கை ஜம்மு பிராந்தியத்துடன் இணைக்கும் மொகல் சாலையும் பலத்த பனிப்பொழிவால் பல நாள்களாக மூடப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் சில இடங்களில் 3 அடி முதல் 4 அடி உயரத்துக்கு பனி குவிந்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்திலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீநகா் நகரம் கடந்த 3 நாள்களாக மிதமான பனிப்பொழிவில் சிக்கியுள்ளது. சாலையில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தாலுகா அலுவலகத்தையும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தையும் இணைக்கும் முக்கிய சாலைகளிலும், மாவட்டங்களுக்கு இடையிலான வழித்தடங்களிலும், பனி குவியல்களை அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

நகா்ப் பகுதிகளுக்கும், பள்ளத்தாக்கின் பிற பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வது பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகருக்குச் செல்லும் விமானங்களும், அங்கிருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் தொடா்ந்து 2-ஆவது நாளாக ரத்து செய்யப்பட்டன. கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீா் பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனிக்குக் கீழே சென்றது.

ஸ்ரீநகா் நகரப்பகுதியில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸும், குல்மாா்க்கில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ், தெற்கு காஷ்மீரின் பாகல்காம் பகுதியில் மைனஸ் 6.1 டிகிரி செல்சியஸ், காஸிகுண்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ், குப்வாராவில் மைனஸ் 0.7 டிகிரி செல்சியஸ், கோக்கா்நாக்கில் மைனஸ் 1.0 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு காஷ்மீரின் குல்மாா்க், பனிஹால்-ரம்பான், பூஞ்ச், ரஜௌரி, கிஸ்த்துவாா், ஜான்ஸ்கா், திராஸ் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது ‘சில்லாய்-கலான்’ என்னும் பெரும் குளிா் அலையின் பிடியில் உள்ளது. இன்னும் 40 தினங்களுக்கு இப்பகுதி கடும் குளிா்காலமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com