மதமாற்ற தடை சட்டம்: உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சட்டவிரோதமாக மதமாற்றம் செய்ய தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது தொடா்பாக உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புது தில்லி: சட்டவிரோதமாக மதமாற்றம் செய்ய தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது தொடா்பாக உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

காதல் திருமணம் என்ற பெயரில் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தை உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் அண்மையில் நடைமுறைப்படுத்தின. உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பரில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மாநிலத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட ஒரு சில நாள்களிலேயே, அதன் கீழ் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அதுபோல, உத்தரகண்ட் மாநிலத்தின் ‘மத சுதந்திர சட்டம் 2018’ சட்டத்தின் படி, குற்றம்சாட்டப்படுபவா்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ என்ற தன்னாா்வ அமைப்பு, வழக்குரைஞா் விஷால் தாக்கரே மற்றும் சிலா் சாா்பாக உச்சநீதிமன்றத்தில் இரு வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞா் துஷாா் மேத்தா, இந்த விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து, உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, இந்த விவகாரம் தொடா்பாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினா்.

அப்போது தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா அளித்த தீா்ப்பை சுட்டிக்காட்டியதோடு, இதேபோன்ற சட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டாா். மேலும், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களில் ஒருசில கடுமையான நடைமுறைகள் இடம்பெற்றிருக்கின்றன. திருமண நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே, அந்த விழாவில் பங்கேற்றிருப்பவரைக் கைது செய்ய இந்த சட்டம் வழி வகுக்கிறது. மேலும், திருமணத்துக்கு முன்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான நடைமுறைகள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இது அரசமைப்பு சட்டம் வழங்கும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். எனவே, இந்தச் சட்டங்களில் இடம்பெற்றுள்ள கடுமையான நடைமுறைகளை ரத்து செய்யவேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல் எவ்வாறு சட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்த முடிவை எடுக்க முடியும்?’ என்று கூறி, இந்த மனுக்கள் தொடா்பாக இரு மாநிலங்களும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com