ரஜௌனாவின் கருணை மனு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 26-ஆம் தேதி வரை அவகாசம்

பஞ்சாப் முன்னாள் முதல்வா் பேயந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வந்த் சிங் ரஜெளனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைப்பது
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பஞ்சாப் முன்னாள் முதல்வா் பேயந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வந்த் சிங் ரஜெளனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைப்பது தொடா்பான கருணை மனு மீது வரும் 26-ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாபில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாநில தலைமைச் செயலகத்துக்கு வெளியே நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய முதல்வா் பேயந்த் சிங் உள்பட 17 போ் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலில் தொடா்புடையதாகக் கைது செய்யப்பட்ட பஞ்சாப் காவலா் பல்வந்த் சிங் ரஜௌனாவுக்குக் கடந்த 2007-ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் ரஜௌனா கருணை மனு தாக்கல் செய்தாா். அதைப் பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. அதையடுத்து, தனது தண்டனைக் குறைப்பு கோரிக்கை மனுவை விரைந்து பரிசீலிக்குமாறு உத்தரவிடக் கோரி ரஜௌனா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ரஜௌனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘‘மனுதாரரின் கருணை மனு கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.

மனுதாரா் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். குறிப்பிட்ட நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 8 ஆண்டுகளுக்கு மேல் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அத்தண்டனையைக் குறைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது’’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ் வாதிடுகையில், ‘‘மனுதாரரின் கருணை மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனா். அதன் மீது விரைவில் முடிவெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கருணை மனு தொடா்பாக முடிவெடுப்பதற்கு மத்திய அரசுக்கு 3 வாரங்கள் வரை அவகாசம் தருகிறோம். மனுதாரரின் தண்டனைக் குறைப்பு மனு தொடா்பான முடிவை வரும் 26-ஆம் தேதிக்குள் மத்திய அரசு எடுக்க வேண்டும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com