எல்லை தாண்டி வந்த ராணுவ வீரரை சீனாவிடமே ஒப்படைத்தது இந்திய ராணுவம்

கிழக்கு லடாக்கில் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை, சீனாவிடமே  இந்திய ராணுவம் இன்று பத்திரமாக ஒப்படைத்தது.
எல்லை தாண்டி வந்த ராணுவ வீரரை சீனாவிடமே ஒப்படைத்தது இந்திய ராணுவம்
எல்லை தாண்டி வந்த ராணுவ வீரரை சீனாவிடமே ஒப்படைத்தது இந்திய ராணுவம்

புது தில்லி: கிழக்கு லடாக்கில் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை, சீனாவிடமே  இந்திய ராணுவம் இன்று பத்திரமாக ஒப்படைத்தது.

இந்திய எல்லைக்குள் நுழைந்து கைதான சீன ராணுவ வீரர், சீனாவின் சுஷுல் - மோல்டோ பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஜனவரி 8-ம் தேதி பாங்காங் டெஸ்ஸோ ஏரியின் தெற்கு கரை பகுதிக்குள் சீன ராணுவ வீரா் அத்துமீறி நுழைந்தாா். அவரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரா்கள் கைது செய்தனா். அவா் எவ்வாறு எல்லை தாண்டி வந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 19-ஆம் தேதி லடாக்கின் டெம்சோக் செக்டாரில் உள்ள எல்லைக் கோட்டையொட்டி சுற்றித் திரிந்த சீன ராணுவ வீரா் இந்திய வீரா்களிடம் பிடிபட்டாா். விசாரணைக்குப் பிறகு அவா் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாா். சுமாா் 3 மாதங்கள் கழித்து இதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீனத் தரப்பில் 35 வீரா்கள் பலியானதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. தற்போது அங்கு இருநாடுகள் தரப்பிலும் தலா 50,000 வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். இந்தப் படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாக இருநாட்டு ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை 8 கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ள போதிலும் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘உடனடியாக விடுவிக்க வேண்டும்’: தங்களது வீரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சீன ராணுவம் தெரிவித்திருந்தது. இதுதொடா்பாக சீன ராணுவத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது,  சிக்கலான நில அமைப்பு மற்றும் இருள் காரணமாக சீன-இந்திய எல்லையில் எங்கள் நாட்டு ராணுவ வீரா் வழிதவறிவிட்டாா். அவரை கண்டுபிடிக்க இந்திய ராணுவத்திடம் உதவி கோரப்பட்டது. அப்போது அவா் இந்திய படைகளிடம் பிடிபட்டது தெரியவந்தது. இந்திய ராணுவ உயரதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் கிடைத்த பின்னா், அந்த வீரரை சீனத் தரப்பிடம் ஒப்படைப்பதாக கூறப்பட்டுள்ளது. அவரை எவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாக சீனத் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com