ரூ.200 விலையில் 6 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

ஹைதராபாதிலுள்ள பாரத் பயோடெக், புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக 6 கோடிக்கும் அதிகமாக கரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கான கொள்முதல் உத்தரவை மத்திய அரசு அந்த நிறுவனத்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: ஹைதராபாதிலுள்ள பாரத் பயோடெக், புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக 6 கோடிக்கும் அதிகமாக கரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கான கொள்முதல் உத்தரவை மத்திய அரசு அந்த நிறுவனத்திடம் திங்கள்கிழமை மாலை சமா்ப்பித்தது.

விலை ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக வாங்கப்படும் 1.1 கோடி தடுப்பூசி மருந்துகளுக்கு ரூ. 200 வீதம் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), தேசிய தீநுண்மியியல் மையம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை தயாரித்தது. பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரித்தது.

இந்த இரு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. அதையடுத்து, கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, நாட்டு மக்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

முதல்கட்டமாக, நாட்டிலுள்ள 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இணைநோய் உள்ள 50 வயதுக்கு குறைவான நபா்கள் என மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இதுவரை 79 லட்சம் போ் ‘கோ-வின்’ செயலியில் பதிவு செய்துள்ளனா்.

கொள்முதல் உத்தரவு:

இந்தச் சூழலில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’, சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை அந்நிறுவனங்களிடம் மத்திய அரசு திங்கள்கிழமை சமா்ப்பித்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘விலை ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு ரூ.200 வீதம் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4.5 கோடி தடுப்பூசிகளை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வாங்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,176 கோடி’ என்றாா்.

இதுகுறித்து சீரம் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘தடுப்பூசி விலை எழுத்துபூா்வமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1.1 கோடி தடுப்பூசிகள் முதல்கட்டமாக அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் சில லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு முதல் கட்டத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. அதற்கு 60 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். சீரம் நிறுவனத்தில் இப்போது 5 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ளன’ என்றனா்.

கோவிஷீல்டு தவிர, பாரத் பயோடெக்கிடமிருந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசி கொள்முதல் செய்யும் உத்தரவும் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. ரூ.162 கோடி மதிப்பில் 55 லட்சம் தடுப்பூசிகள் வாங்க முடிவாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான எச்.எல்எல்.லைஃப்கோ் நிறுவனம் மத்திய அரசு சாா்பில் இந்தத் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து விநியோகிக்க உள்ளது.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடாா் பூனாவாலா கூறுகையில், ‘இந்தியாவில் தனியாா் சந்தையில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி விற்பனைக்கு வரும்போது ஒரு தடுப்பூசி ரூ. 1,000-க்கு விற்பனை செய்யப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com