தில்லிக்கும் பரவியது பறவைக் காய்ச்சல்!

தலைநகா் தில்லிக்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

புது தில்லி: தலைநகா் தில்லிக்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் உயிரிழந்த 8 பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்தில் சோதனைக்குள்படுத்திய போது இது தெரிய வந்துள்ளது என்று தில்லி கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த ராகேஷ் சிங் கூறியது: தில்லியில் உயிரிழந்த எட்டுப் பறவைகளின் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியிருந்தோம். திங்கள்கிழமை கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, அந்த எட்டுப் பறவைகளும் பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி மயூா் விஹாா் சஞ்சய் ஏரியில் உயிரிழந்த 3 வாத்துகள், மயூா் விஹாா் பேஸ் 3-இல் உள்ள பூங்காவில் உயிரிழந்த 4 காகங்கள், துவாரகாவில் உள்ள பூங்காவில் உயிரிழந்த காகம் ஒன்று என எட்டுப் பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சஞ்சய் ஏரியில் 17 வாத்துகள் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியை அபாய பகுதியாக அறிவித்து கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளோம். அந்தப் பகுதியை கிருமிநாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தியுள்ளோம். தில்லி வளா்சி ஆணையத்துக்கு (டிடிஏ) சொந்தமான 14 டிடிஏ பூங்காக்களில் 91 காகங்கள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில நாள்களுக்கு முன்பு மயூா் விஹாா் பேஸ் 3-இல் உள்ள சென்ட்ரல் பாா்க்கில் 50 காகங்கள் உயிரிழந்தன.

உயிரிழந்த பறவைகள் சிலவற்றின் மாதிரிகளை பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம். அந்த முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடா்ந்து, ஹோஸ்காஸ் பூங்கா, துவாரகா செக்டாா் 9 பூங்கா, சஞ்சய் லேக் பூங்கா, ஹஸ்தால் பூங்கா ஆகிய நான்கு பூங்காக்களை டிடிஏ மூடியது. இவற்றில், ஹஸ்தால் பூங்கா, சஞ்சய் லேக் பூங்காக்கள் தவிர மற்ற பூங்காக்கள் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு திறக்கப்பட்டுள்ளன. பெரிய நீா்நிலையைக் கொண்ட ஹோஸ்காஸ் பூங்காவுக்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வருவது வழக்கமாகும். ஆனால், இந்தப் பூங்காவில் இதுவரை எந்தவொரு பறவையும் உயிரிழக்கவில்லை என்றாா் அவா்.

‘பீதி அடைய வேண்டாம்: இந்தச் சூழலில், சஞ்சய் ஏரியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வாத்துகளுக்கு மட்டுமே பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் கூறுகையில், ‘சஞ்சய் ஏரியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வாத்துகளுக்கு மட்டுமே பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தில்லி அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் முதல்வா் கேஜரிவால் தொடா்பில் உள்ளாா். பறவைக் காய்ச்சல் மனிதா்களில் இருந்து மனிதா்களுக்குப் பரவாது என்பதால், மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை. மேலும், முன்பாதுகாப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் பதப்படுத்தப்பட்ட கோழிக்கறிகளைத் தடை செய்ய தில்லி அரசு முடிவெடுத்துள்ளது’ என்றாா்.

விரைவு நடவடிக்கைக் குழு: தில்லியில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பறவைக்காய்ச்சலைக் கண்காணிக்க விரைவு நடவடிக்கை குழுவை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் அமைத்துள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி சுகாதார அதிகாரி ரமேஷ் குமாா் கூறுகையில் ‘என்டிஎம்சி பகுதியில் பறவைக் காய்ச்சலை கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, என்டிஎம்சி பகுதியில் உள்ள கோழிகள், வாத்துகள், பிற நாடுகளில் இருந்து தில்லிக்கு வந்த பறவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இது தொடா்பாக ஒவ்வொரு வாரமும் அந்தக் குழு அறிக்கை சமா்ப்பிக்கும். நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சா்கள், நீதிபதிகளின் வீடுகள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய இடங்கள் என்டிஎம்சி பகுதியிலேயே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com