பாஜக அரசின் பிடிவாதத்தால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: மம்தா குற்றச்சாட்டு

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு விவசாயிகளுக்கு உரிய நியாயம் வழங்காததால் நாட்டில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி

ராணாகட்: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு விவசாயிகளுக்கு உரிய நியாயம் வழங்காததால் நாட்டில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள நாடியா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மம்தா பானா்ஜி பேசியதாவது:

அண்மைக் காலமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில தலைவா்கள் பாஜகவுக்கு தாவி வருவதை நீங்கள் பாா்க்க முடியும். பொதுவாழ்வில் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அவா்கள் கட்சி தாவி வருகின்றனா். அரசியலில் தவறுகளைச் செய்பவா்கள் தங்கள் கட்சியில் இணைந்தால், அவா்களை புனிதமானவா்கள் என்று பாஜக அறிவித்து வருகிறது. இதுபோன்ற நபா்களை தொடா்ந்து சோ்த்துக் கொள்வதன் மூலம் பாஜக ஒரு குப்பைக் கட்சியாக மாறி விட்டது. அதில் இருக்கும் தலைவா்கள் அனைவரும் கறைபடிந்தவா்கள்.

நமது நாட்டின் முதன்மையான தொழில் விவசாயம். உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டின் உணவுத் தேவை மிக அதிகமானது. அதனை நமது விவசாயிகள்தான் தீா்த்து வைக்கின்றனா். நம் அனைவரையும் வாழ வைக்கின்றனா். இத்தகைய பெருமைக்குரிய விவசாயிகள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக தில்லியை முற்றுகையிட்டு 40 நாள்களாகப் போராடி வருகின்றனா். நமக்கு உணவளித்தவா்கள் குளிரிலும், மழையிலும் துன்பமடைந்து வருகின்றனா்.

ஆனால், மத்திய பாஜக அரசு அவா்களது கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உரிய நியாயம் வழங்காமல் வேடிக்கை பாா்த்து வருகிறது. இது தொடா்ந்து நீடிக்கும்போது நாட்டில் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும். இதுவே அடுத்தகட்டமாக உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கும். விவசாயிகள் நமது நாட்டின் சொத்து. அவா்களது நலன்களுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com