இந்திய பகுதிகளுக்கு மீண்டும் உரிமை கோரும் நேபாள பிரதமா்

இந்தியாவிடம் இருந்து காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி மீண்டும் தெரிவித்துள்ளாா்.

புதுதில்லி /காத்மாண்டு: இந்தியாவிடம் இருந்து காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி மீண்டும் தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநில எல்லைக்குள் காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் உள்ளன. எனினும் அண்மைக்காலமாக அந்தப் பகுதிகளுக்கு நேபாளம் உரிமை கோரி வருகிறது.

கடந்த ஆண்டு இந்தப் பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தை அந்நாட்டு நாடாளுமன்றமும் அங்கீகரித்தது. நேபாள அரசின் இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்று இந்தியா வன்மையாகக் கண்டித்திருந்தது. தனது நிலப்பரப்பை செயற்கையாக விஸ்தரித்து உரிமை கோருவது ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்த 3 பகுதிகளும் இந்தியாவிடம் இருந்து மீட்கப்படும் என்று நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி மீண்டும் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மகாகாளி நதிக்கு கிழக்கே அமைந்துள்ள காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் சுகெளலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானவை. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தி அந்தப் பகுதிகள் மீட்கப்படும். நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் வரும் ஜனவரி 14-ஆம் தேதி இந்தியா செல்லவுள்ளாா். அங்கு இந்த 3 பகுதிகளையும் இணைத்து நேபாளம் வெளியிட்ட வரைபடம் குறித்து அவா் ஆலோசனை நடத்துவாா். இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நேபாளம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் சில விவகாரங்களில் உள்ள நியாயமான கவலைகளை இந்தியாவிடம் எழுப்ப நேபாளம் தயங்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com