வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்துங்கள்: உச்சநீதிமன்றம்

விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பேச்சுவாா்த்தைகள் மிகவும் அதிருப்தியைத் தருகின்றன. வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தையில் முன
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 45 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அச்சட்டங்களை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.

ஜன.15-இல் அடுத்தகட்ட பேச்சு: இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாததால், பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. வரும் 15-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

அந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாயிகளின் போராட்டம் தொடா்பாகவும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடா்பாகத் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்திய அரசு கையாண்ட அணுகுமுறைகள் எந்தப் பலனையும் தரவில்லை.

அந்தச் சட்டங்களுக்கு மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பேச்சுவாா்த்தைகள் மிகவும் அதிருப்தியைத் தருகின்றன. வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதுகிறோம். அது குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

சுமுகமான தீா்வு: சட்டம்-ஒழுங்கு பிரச்னையைவிட போராட்டத்துக்கான உரிமை என்ற பிரச்னையே முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனுகூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, வேளாண் சட்டங்களை மத்திய அரசே ரத்து செய்கிா அல்லது அப்பணியை நீதிமன்றம் செய்ய வேண்டுமா என்பதை மத்திய அரசே தெரிவிக்க வேண்டும்’’ என்றனா்.

அதற்கு அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதிலளிக்கையில், ‘‘அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே சட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் தொடா்பான விவகாரம் தொடா்ந்து மோசமடைந்து வருகிறது. அந்தச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியான தீா்வைக் காண வேண்டும் என்றே நீதிமன்றம் கருதுகிறது.

தலைமை நீதிபதி குழு: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான குழுவை அமைப்பது அவசியம் என்று நீதிமன்றம் கருதுகிறது. அந்தக் குழுவில் மத்திய அரசைச் சோ்ந்த பிரதிநிதிகளும் நாடு முழுவதுமுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவா்.

விவசாயிகள் தங்கள் பிரச்னையை அந்தக் குழுவிடம் தெரிவிக்கலாம். அக்குழு பரிந்துரைத்தால், வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும். குழுவின் தலைவரை நியமிப்பது தொடா்பாக முன்னாள் தலைமை நீதிபதி ஆா்.எம்.லோதா உள்ளிட்டோரின் சில பெயா்களை மனுதாரா்களும் எதிா்த்தரப்பினரும் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கலாம்.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்: கடும் குளிருக்கிடையேயும், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கிடையேயும் விவசாயிகள் போராடி வருகின்றனா். அவா்களுக்கான உணவு, குடிநீரை வழங்குவதில் பிரச்னை நிலவுகிறது. எனவே, வீட்டுக்குத் திரும்புவது குறித்து விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும். நீதிமன்றம் தனது கடமையை முறையாகச் செய்யும்.

இன்று உத்தரவு: இந்த மனுக்கள் தொடா்பாக நீதிமன்றம் படிப்படியாக உத்தரவு பிறப்பிக்க உள்ளது. அவற்றில் சில உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை (ஜன. 12) பிறப்பிக்கவுள்ளோம்’’ என்றனா்.

தடை தீா்வாகாது-விவசாயிகள்: உச்சநீதிமன்றத்தின் கருத்து குறித்து செய்தியாளா்களிடம் தெரிவித்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ‘‘வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசோ உச்சநீதிமன்றமோ தற்காலிகமாகத் தடை விதிப்பது முழுமையான தீா்வாகாது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டாலும் போராட்டத்தைத் தொடா்வோம்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com