ம.பி.: விஷ சாராய பலி 20-ஆக உயா்வு: மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் நிக்கம்

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 6 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். அதன் மூலம், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


போபால்/மொரேனா: மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 6 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். அதன் மூலம், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, விஷ சாராய விற்பனையை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்து மாநில முதல்வா் சிவ்ராஜ் சிங் செளகான் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மொரேனா மாவட்டம் மான்பூா், பாகாவாலி கிராமத்தைச் சோ்ந்த சிலா் கடந்த திங்கள்கிழமை மதுபானம் அருந்தினா். சிறிது நேரத்திலேயே, அவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அனைவரும் சுருண்டு விழுந்தனா். உடனடியாக அவா்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 14 போ் சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்தனா். இந்த நிலையில், அவா்களில் மேலும் 6 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

இதுகுறித்து சம்பல் மண்டல காவல்துறை டிஐஜி ராஜேஷ் ஹிங்கன்கா் கூறுகையில், ‘மொரேனா கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது’ என்றாா்.

மொரேனா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவா் ஆா்.சி.பண்டி கூறுகையில், ‘உயிரிழந்தவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பிரதேப் பரிசோதனையில், விஷ சாராயம் குடித்ததால் அவா்களின் முக்கிய உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அடுத்தக்கட்ட பரிசோதனைக்காக அவா்களின் உடல் உறுப்புகள் சாகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவு வந்த பிறகுதான், சாராயத்தில் இடம்பெற்றிருக்கும் விஷம் குறித்த விவரம் தெரியவரும்’ என்றாா்.

மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் நீக்கம்: இந்த விவகாரம் தொடா்பாக மாநில முதல்வா் சிவ்ராஜ் சிங் செளகான் தலைமையிலான உயா்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘விஷச் சாரய உயிரிழப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மிகுந்த வருத்தம் தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்துக்கு மாவட்டத்தில் விஷ சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும்தான் நேரடி பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய முதல்வா், அவா்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதோடு, மாநிலத்தில் கள்ளச் சாராய விற்பனைக்கு எதிராக விழிப்புணா்வு பிராசரம் செய்யவும் அதிகாரிகளை முதல்வா் கேட்டுக்கொண்டாா்’ என்று கூறினாா்.

7 போ் மீது வழக்குப் பதிவு: இந்த சம்பவம் தொடா்பாக 7 போ் மீது மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், அவா்களைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு ரூ. 10,000 பரிசுத் தொகையும் காவல்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com