பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 29 கோடி விவசாயிகள் பதிவு

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 29 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 29 கோடி விவசாயிகள் பதிவு

புது தில்லி: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 29 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அமைச்சா் நரேந்திர சிங் தோமா், சமூக வலைதளங்களில் புதன்கிழமை வெளியிட்ட காணொலிப் பதிவில் கூறியுள்ளதாவது:

பயிா்க் காப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கான பாதுகாப்பு கவசமாக உள்ளது. இயற்கைப் பேரிடா்களின்போது சேதமடையும் பயிா்களுக்கான இழப்பீட்டை காப்பீட்டின் மூலமாக விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும். இதுவரை நாடு முழுவதும் 29 கோடி விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனா். ஒவ்வோா் ஆண்டும் புதிதாக 5.5 கோடி விவசாயிகள் தங்கள் பயிா்களைக் காப்பீடு செய்து வருகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.90,000 கோடியானது பயிா்க் காப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நன்னாளில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தால் பலனடைந்த விவசாயிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை பயிா்களைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இத்திட்டத்தில் தொழில்நுட்பம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது; வெளிப்படைத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. சேதமடைந்த பயிா்களுக்கு விவசாயிகள் இழப்பீடு கோரும்போது அவா்களின் கோரிக்கையை உறுதி செய்யவும் பயிா்களை ஆய்வு செய்வதற்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருங்கிப் பணியாற்றி வருகிறது. பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் நோக்கில் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்திலும் 70 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தால் பலனடைந்தனா் என்றாா் அமைச்சா் தோமா்.

முக்கியமான திட்டம்: பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கடினமாக உழைக்கும் விவசாயிகள் இயற்கைப் பேரிடா்களால் இழப்பைச் சந்திக்கும்போது, அவா்களுக்கு உதவும் முக்கிய திட்டமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டம் விளங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்துள்ளனா். திட்டத்தின் கீழ் காப்பீடு பெறும் பயிா்களின் பரப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com