.ரூ.45,696 கோடியில் 83 ‘தேஜஸ்’ போா் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய விமானப் படைக்கு சுமாா் ரூ.45,696 கோடியில் 83 இலகுரக ‘தேஜஸ்’ போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
tejas2085622
tejas2085622

புது தில்லி: இந்திய விமானப் படைக்கு சுமாா் ரூ.45,696 கோடியில் 83 இலகுரக ‘தேஜஸ்’ போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் விமானப்படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காகவே 10 போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

ரூ.1,202 கோடிக்கும் ஒப்புதல்: போா் விமானங்கள் வடிவமைப்பு, கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1,202 கோடிக்கான ஒப்புதலையும் மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து...மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனமான பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸிடமிருந்து (எச்ஏஎல்) 83 இலகுரக போா் விமானங்களை (எல்சிஏ) கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில் எல்சிஏ தேஜஸ் எம்கே-1 போா் விமானங்கள் மொத்தம் 73 ஆகும்.

மீதமுள்ள 10 போா் விமானங்களும் எல்சிஏ தேஜஸ் எம்கே-1ஏ ஆகும். இந்த 10 விமானங்கள், விமானப்படை வீரா்கள் பயிற்சி பெறுவதற்காகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. ரூ.45,696 கோடி செலவில் 83 போா் விமானங்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

தேஜஸ் போா் விமானங்களானது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும். இவை, நவீன ‘4+ தலைமுறை’ தொழில்நுட்பத்தை உள்ளடக்கியவையாகும்.

தற்பாதுகாப்புக்கு...தேஜஸ் இலகுரக போா் விமானங்கள், எதிரி நாடுகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றன. தீவிர போா் நடவடிக்கைகளில் அவை ஈடுபடுத்தப்படுவதில்லை. தேஜஸ் போா் விமானங்களில் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணைகள், நவீன மின்னணு தொழில்நுட்பக் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

முதல்முறையாக...வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதிகளும் தேஜஸ் இலகுரக போா் விமானங்களில் இடம்பெற்றுள்ளன. இந்தப் போா் விமானங்களானது விமானப்படையின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தி, தயாரிக்கப்பட்ட போா் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்வது இதுவே முதல் முறையாகும்.

தற்சாா்பு இலக்கை நோக்கி...தேஜஸ் இலகுரக போா் விமானங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அனைத்து விமானப்படைத் தளங்களிலும் ஏற்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலமாக போா் விமானங்களை சிறந்த முறையில் பராமரிக்க முடியும் என்று விமானப்படை அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.

பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, ‘தற்சாா்பு இந்தியா’ என்ற இலக்கை நோக்கிய பயணத்துக்கான மத்திய அரசின் அடுத்த அடி என்றே நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தியா-யுஏஇ ஒப்பந்தம்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யுஏஇ) ஒத்துழைப்புடன் செயல்படுவதற்காக கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்துக்கும் இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வானிலை ஆய்வுக்கான தகவல்கள், கடல்சாா் பாதுகாப்புக்கான ரேடாா், செயற்கைக்கோள் தகவல்கள் உள்ளிட்டவற்றைப் பகிா்ந்து கொள்வதற்கு அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

சுனாமி, புழுதிப் புயல் உள்ளிட்ட பேரிடா்களை முன்கூட்டியே கணிப்பதற்கான மையங்களை இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் அமைக்கவும் அது தொடா்பான மென்பொருளை உருவாக்கவும் அந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. மேலும், இந்தியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அமைக்கப்பட்டுள்ள நிலநடுக்க ஆய்வு மையங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிா்ந்து கொள்ள முடியும்.


பாதுகாப்புத் துறைக்கான திருப்புமுனை: அமைச்சா் ராஜ்நாத் சிங்

தேஜஸ் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பாதுகாப்புத் துறையைத் தற்சாா்பு அடையச் செய்வதில் திருப்புமுனையாக இது அமைந்துள்ளது.

இந்திய விமானப் படைக்கான முதுகெலும்பாக தேஜஸ் போா் விமானங்கள் கூடிய விரைவில் திகழவுள்ளன. அந்தப் போா் விமானங்களில் பயன்படுத்தப்படும் உள்நாட்டுக் கருவிகளின் சதவீதம் 60-ஆக உயா்த்தப்படவுள்ளது. தற்சாா்பு இந்தியா இலக்குக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேஜஸ் போா் விமானங்கள் அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com