புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகள்: நாளை தொடக்கம்

தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.15) தொடங்கப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகள்: நாளை தொடக்கம்

புது தில்லி: தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.15) தொடங்கப்பட உள்ளது.

மகர சங்கராந்தி முடிந்து வரும் முதல் நாளில் பணிகளைத் தொடங்குவது சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில், கட்டுமானப் பணிகளை வரும் 15-ஆம் தேதி தொடங்குமாறு கட்டுமான ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ள டாடா திட்ட நிறுவனத்தை மத்திய பொதுப் பணித்துறை கேட்டுக்கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தை எழுப்பப்பட உள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பலா் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவற்றை அடக்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே நேரம், அந்த நிலத்தை பயன்படுத்துவது தொடா்பாக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தனது தீா்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை மேற்கொள்ள 14 உறுப்பினா்களைக் கொண்ட பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவும் இந்த வார தொடக்கத்தில் அனுமதி அளித்தது.

அதனைத் தொடா்ந்து கட்டுமானத் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியது. கட்டுமான ஒப்பந்தம் டாடா திட்ட நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.

அந்த நிறுவனம், கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்க உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘மகர சங்கராந்தியை முன்னிட்டு, புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை வரும் 15-ஆம் தேதி தொடங்க டாடா நிறுவனத்தை மத்திய பொதுப் பணித் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில், கட்டுமான இடத்துக்கு இயந்திரங்கள், கட்டுமான உபகரணங்களை கொண்டு செல்லும் பணிகளை கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளது’ என்றனா்.

கட்டுமான திட்டத்தின்படி, இந்த ஆண்டு குடியரசு தின விழா முடிந்தவுடன், ராஜ பாதையை சீரமைக்கும் பணி தொடங்கப்படும். அதுபோல, நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், வரும் 2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com