பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலி: தில்லியில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை

கோழிகளை பண்ணைகளில் வைத்திருப்பதற்கும், கோழி இறைச்சிகளை விற்பதற்கும், கடைகள், உணவகங்களில் பதப்படுத்தி வைப்பதற்கும் வடக்கு தில்லி மாநாகராட்சிகள் தடை விதித்துள்ளன.
பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலி: தில்லியில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை



புது தில்லி: கோழிகளை பண்ணைகளில் வைத்திருப்பதற்கும், கோழி இறைச்சிகளை விற்பதற்கும், கடைகள், உணவகங்களில் பதப்படுத்தி வைப்பதற்கும் வடக்கு தில்லி மாநாகராட்சிகள் தடை விதித்துள்ளன. தலைநகர் தில்லியில் பறவைக்காய்ச்சல் நோய் பரவலாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல உணவகங்கள், ஹோட்டல்களில் கோழி முட்டை மற்றும் இறைச்சியை பதப்படுத்தி வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு, வடக்கு, தெற்கு தில்லி மாநாகராட்சிகள் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்
துள்ளன.
கடந்த திங்கள்கிழமை தலைநகர் தில்லியில் காக்கைகள் மற்றும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது அவற்றின் மாதிரிகளைச் சோதனை செய்த போது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வெளியிடங்களிலிருந்து பதப்படுப்பட்ட மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் கோழி இறைச்சிகளை தில்லிக்கு கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தில்லியில் பறவைக்காய்ச்சல் இருப்பதாக தெரிய வந்துள்ளதை அடுத்து காஜிப்பூர் சந்தை மூடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனைத்துக் கோழிப் பண்ணைகள் மற்றும் இறைச்சி விற்பனையாளர்கள் இறைச்சிகளை விற்பதற்கும், பதப்படுத்தி வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் தில்லி நகரில் உள்ள பல்வேறு பூங்காக்களில் சுற்றித்திரிந்த காக்கைகள் மற்றும் சஞ்சய் ஏரி பகுதியில் இருந்த வாத்துகள் பறவைக் காய்ச்சல் நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் இதுவரை 50 பறவைகள் பறவைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்துள்ளதாக கால்நடைப் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து 18 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com