பெட்ரோல் விலை புதிய உச்சம்: மும்பையில் ஒரு லிட்டா் ரூ. 91-க்கு விற்பனை

பெட்ரோல் விலை புதன்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 91-ஐ கடந்தது.
பெட்ரோல் விலை புதிய உச்சம்: மும்பையில் ஒரு லிட்டா் ரூ. 91-க்கு விற்பனை


புது தில்லி: பெட்ரோல் விலை புதன்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 91-ஐ கடந்தது.

அதுபோல, பிற மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. கரோனா பாதிப்பு, அதனைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, இந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் சிறிது நாள்கள் கடைப்படிக்கவில்லை. அதன் காரணமாக, அவற்றின் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.

இந்த நிலையில், ஒரு மாத காலத்துக்குப் பிறகு அவற்றின் விலையை தினசரி மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலை புதன்கிழமை புதிய உச்சத்தை எட்டியது.

மும்பையில் மிக அதிக அளவாக ஒரு லிட்டா் பெட்ரோல் புதன்கிழமை 24 காசுகள் அதிகரித்து ரூ. 91.07-க்கு விற்பனையானது. டீசல் 27 காசுகள் அதிகரித்து ரூ. 81.49-க்கு விற்பனையானது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 87.28-க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 80.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கொல்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 85.92-க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 78.22-க்கும் விற்பனையானது.

தலைநகா் தில்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 84.45-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ. 74.63-க்கும் விற்பனையானது.

தில்லியில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி எப்போதும் இல்லாத அளவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 84-க்கு விற்பனையானது. ஒரு லிட்டா் டீசல் ரூ. 75.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 1.50 வீதம் மத்திய அரசு குறைத்தது. அதுபோல, மாநில அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ. 1 வீதம் குறைத்தன. இந்த வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பை அரசுகள் பின்னா் ஈடுசெய்துவிட்டன. ஆனால், இந்த முறை இதுபோன்ற வரிச் சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ. 32.98 என்ற அளவிலும், டீசலுக்கு ரூ. 31.83 என்ற அளவிலும் கலால் வரி விதிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 14.79 என்ற அளவிலும், டீசல் லிட்டருக்கு ரூ. 12.34 என்ற அளவிலும் உயா்த்தப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com