பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியப் போக்கு: உ.பி. அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில அரசு அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.
பிரியங்கா காந்தி(கோப்புப்படம்)
பிரியங்கா காந்தி(கோப்புப்படம்)

புது தில்லி: பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில அரசு அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் கோரக்பூரில் 12 பெண்கள் உயிரிழந்ததாக வெளியான ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி, முகநூலில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசின் பெண்களுக்கு ஆதரவான முழக்கங்கள் வெற்று முழக்கங்கள்.
மகளிர் பாதுகாப்புக்காக "மிஷன் சக்தி' என்ற பெயரில் விளம்பரங்களுக்காக அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. அதேநேரம், அடித்தட்டு பெண்கள் விவகாரத்தில் அலட்சிய மனப்பான்மையைக் கொண்டுள்ளது. சில வழக்குகளில் உயிரிழந்த பெண்களை அடையாளம் காணக்கூட காவல் துறையினரால் முடியவில்லை.
மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் சராசரியாக 165 குற்றங்கள் நிகழ்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும்போது மோசமான பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அனுதாபத்துக்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு அவமரியாதை செய்யப்படுகிறது.
ஹாத்ரஸ், உன்னாவ், பதாயுன் போன்ற சம்பவங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசின்அணுகுமுறையை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது.
பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய அடிப்படைப் புரிதலில் பெண்ணின் குரலே முதன்மையானது. ஆனால், மாநில அரசோ எப்போதும் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது குடும்பத்தினர் குரல் எழுப்பும்போது அவர்கள் மீது ஆளும் கட்சியினர் மோசமான கருத்துகளைத் தெரிவிப்பதைப்போன்ற வெறுக்கத்தக்க செயல் வேறு எதுவும் இல்லை.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முதன்மையானது அவர்களுக்கு எதிரான குற்றங்களை வெளிக்கொணர்வதாகும். இதற்காக பெண்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com