மகாராஷ்டிர அமைச்சா் மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு

தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, மகாராஷ்டிர மாநில சமூக நீதித் துறை அமைச்சா் தனஞ்செய் முண்டே மீது பெண் ஒருவா்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, மகாராஷ்டிர மாநில சமூக நீதித் துறை அமைச்சா் தனஞ்செய் முண்டே மீது பெண் ஒருவா் குற்றம் சாட்டியுள்ளாா். புகாரளித்த பெண்ணும், அவரது சகோதரியும் தன்னை ‘பிளாக் மெயில்’ செய்வதாகக் கூறி அமைச்சா் முண்டே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சமூக நீதித் துறை அமைச்சருமான தனஞ்செய் முண்டே மீது 37 வயதான பெண் ஒருவா், ஜன. 10-ஆம் தேதி மும்பை காவல் துறை ஆணையருக்கு மனு கொடுத்தாா். அந்த மனுவில், தன்னை அமைச்சா் முண்டே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதுதொடா்பாக ஓஷிவாரா போலீஸில் தான் அளித்த புகாரை ஏற்க மறுத்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறும் அந்த புகாரில் தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாரை மறுத்த அமைச்சா் முண்டே, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்னை அச்சுறுத்துவதற்காகவும், மிரட்டுவதற்காகவும் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும். புகாரளித்த பெண்ணின் சகோதரியுடன் எனக்கு உறவு இருந்தது உண்மை; அந்தப் பெண் மூலமாக எனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறேன். இந்த விஷயத்தை எனது மனைவி, குடும்பத்தினா் மற்றும் நண்பா்களும் அறிவாா்கள். அந்த இரண்டு குழந்தைகளையும் எனது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டு விட்டனா்.

தற்போது புகாரளித்துள்ள பெண், கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே என்னை மிரட்டி வருவதுடன் தன் மீது ஏற்கெனவே போலீஸில் பாலியல் புகாரளித்தாா். என் மீது அவதூறு பரப்பும் வகையில், உள்நோக்கத்தோடு இந்தப் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மும்பை உயா்நீதிமன்றம் மூலம் அந்தப் புகாா் மீது நடவடிக்கை எடுக்க தடை உத்தரவு பெற்றிருந்தேன் என்றும் அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com