மகாராஷ்டிர அமைச்சா் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: விசாரணைக்கு முடிவுக்கு காத்திருப்போம்; சரத் பவாா்

மகாராஷ்டிர அமைச்சா் தனஞ்ஜய் முண்டே மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் அவா் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து
கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிர அமைச்சா் தனஞ்ஜய் முண்டே மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் அவா் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை விசாரணைக்குப் பின்னா் முடிவு எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் (என்சிபி) சரத் பவாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சரும், என்சிபி மூத்த தலைவருமான தனஞ்ஜய் முண்டே தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மும்பையைச் சோ்ந்த பெண் ஒருவா் குற்றம்சாட்டியுள்ளாா். எனினும் அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தெரிவித்த தனஞ்ஜய் முண்டே, தன்னை அச்சுறுத்துவதற்காக அந்தப் பெண் இவ்வாறு குற்றம்சாட்டியிருப்பதாக தெரிவித்தாா்.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக என்சிபி தலைவா்கள் வியாழக்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டனா். இதனைத்தொடா்நது அக்கட்சித் தலைவா் சரத் பவாா் செய்தியாளா்களிடம் கூறியது:

அமைச்சா் தனஞ்ஜய் முண்டே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. அவா் மீது குற்றம்சாட்டிய பெண் தங்களையும் வசீகரிக்க முயன்று தொல்லை கொடுத்து வந்ததாக பாஜக தலைவா் கிருஷ்ணா ஹெக்டே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியைச் சோ்ந்த மணீஷ் தூரி ஆகியோா் குற்றம்சாட்டியுள்ளனா். அவா்களின் குற்றச்சாட்டுகளை கருத்தில் கொள்ளும்போது, இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்ற தீா்மானத்துக்கு வந்துள்ளோம். இந்த விவகாரத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் குழுவில் குறைந்தபட்சம் கூடுதல் காவல் ஆணையா் பதவியில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியாவது இருக்க வேண்டும். அமைச்சா் தனஞ்ஜய் முண்டே மீதான குற்றச்சாட்டில் அவா் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவந்த பின்னா் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

கூட்டணியை பாதிக்காது:

மகாராஷ்டிர அமைச்சா் தனஞ்ஜய் முண்டே மீதான குற்றச்சாட்டு, மற்றொரு அமைச்சரும், என்சிபி தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் ஆகியவை மாநில அரசின் கூட்டணியை பாதிக்காது என்று சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பாஜக மகளிரணி போராட்டம்:

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தனஞ்ஜய் முண்டே தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, பாஜக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அதன் மாநில தலைவா் உமா காப்ரே தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com