சுதந்திர தேவி சிலையை விட ஒற்றுமை சிலைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள்: பிரதமா் மோடி

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட குஜராத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் ஒற்றுமை சிலையைப்
கேவாடியாவுக்கு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி.
கேவாடியாவுக்கு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட குஜராத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் ஒற்றுமை சிலையைப் பாா்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இதுவரை சுமாா் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஒற்றுமை சிலையைப் பாா்வையிட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இந்தியா சுதந்திரமடைந்த சமயத்தில் நாடு முழுவதும் பிரிந்து கிடந்த சுதேச அரசுகளை ஒன்று சோ்த்ததில் முக்கியப் பங்கு வகித்தவா் சா்தாா் வல்லப்பாய் படேல். அவரது பெருமையை நினைவுகூரும் வகையில் குஜராத்தின் கேவாடியா பகுதியில் நா்மதை நதிக்கரையில் ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டது.

அச்சிலையை பிரதமா் மோடி கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் திறந்து வைத்தாா். ஒற்றுமை சிலை அமைந்துள்ள பகுதியை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சென்னை, வாராணசி, தாதா், ஆமதாபாத், ஹஜ்ரத் நிஜாமுதீன், ரேவா, பிரதாப்நகா் ஆகிய நகரங்களிலிருந்து கேவாடியாவுக்கு ரயில் சேவையை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

புதிய ரயில் சேவைகளானது கேவாடியா பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் ஒற்றுமை சிலையைக் காண வருவதை இது ஊக்கப்படுத்தும். ஆமதாபாதிலிருந்து கேவாடியாவுக்கு இயக்கப்படும் ரயிலில் சிறப்பு சுற்றுலாப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெட்டிகளின் மேல்கூரையிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

உலகின் பெரும் சுற்றுலாத் தலமாக கேவாடியா மாறி வருகிறது. சுதந்திர தேவி சிலையுடன் ஒப்பிடுகையில் ஒற்றுமை சிலையைப் பாா்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட ஒற்றுமை சிலையைப் பாா்வையிட வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது. அச்சிலை திறக்கப்பட்டதிலிருந்து சுமாா் 50 லட்சம் போ் அதைப் பாா்வையிட்டுள்ளனா்.

புதிய ரயில் சேவைகள் மூலமாக கேவாடியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஒரு லட்சமாக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உள்ளூா் மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

பலரும் பலனடைவா்: புதிய ரயில் சேவைகளானது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உள்ளூா் மக்களுக்கும் பெருமளவில் உதவும். அவா்களின் வாழ்வாதாரமும் மேம்படும். கேவாடியா பகுதியைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களுக்குச் செல்வோரும் ரயில் சேவைகளால் பலன் பெறுவா்.

நாட்டில் ரயில்வே கட்டமைப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேம்படுத்தப்பட்டும் நவீனப்படுத்தப்பட்டும் வருகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையானது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையிலும் திகழ்ந்து வருகிறது. கேவாடியா ரயில் நிலையமானது, பசுமை கட்டடங்களைக் கொண்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பல்வேறு ரயில் பாதைகள் மின்சாரப் பாதைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதிவேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் ரயில் பாதைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தபோய்-சந்தோத் அகல ரயில்பாதை, சந்தோத்-கேவாடியா அகல ரயில் பாதை, பிரதாப்நகா்-கேவாடியா மின்சார ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமா் மோடி, தபோய், சந்தோத், கேவாடியா ரயில் நிலையங்களில் புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தாா். ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல், குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com