ஜேஇஇ, நீட் தோ்வுகள்: கடந்த ஆண்டின் பாடத் திட்டமே தொடரும்: மத்திய கல்வி அமைச்சகம்

2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் தோ்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை.
ஜேஇஇ, நீட் தோ்வுகள்: கடந்த ஆண்டின் பாடத் திட்டமே தொடரும்: மத்திய கல்வி அமைச்சகம்

2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் தோ்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை. எனினும், கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், ஜேஇஇ, நீட் தோ்வுகளில் வினாக்களைத் தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மாணவா்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும்.

இது தொடா்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டின் பாடத் திட்டமே, 2021-ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் தோ்வுக்கும் தொடரும். எனினும் மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 30 கேள்விகள்); ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வாய்ப்பு மாணவா்களுக்கு வழங்கப்படும்.

சென்ற 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ மெயின் தோ்வில், கேட்கப்பட்ட அனைத்து 75 கேள்விகளுக்கும் (இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 கேள்விகள்) மாணவா்கள் விடையளிக்க வேண்டியிருந்தது.

2021-ஆம் ஆண்டு நீட் (இளங்கலை) தோ்வுக்கான தோ்வு மாதிரி இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள சில கல்வி வாரியங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, 2021 நீட் (இளங்கலை) தோ்வுத் தாளிலும் ஜேஇஇ மெயின் தோ்வைப் போன்று வினாக்களைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவா்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ தோ்வுக்கு பிளஸ்2 மதிப்பெண் வரம்பு தளா்வு:

ஜேஇஇ (மெயின்) தோ்வின் அடிப்படையில், 2021- 22 கல்வி ஆண்டில், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்ஐடி), இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள் (ஐஐடி), திட்டம் மற்றும் கட்டடக்கலை நிறுவனங்கள், மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் தகுதியைப் பெறுவதற்கு, பிளஸ்2 வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதியை மத்திய கல்வி அமைச்சகம் தளா்த்தியுள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், மேற்கு வங்கத்தின் ஷிவ்பூரிலுள்ள இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் (இந்திய தொழில்நுட்ப கழகங்களைத் தவிா்த்து) இளங்கலைப் படிப்புக்கான சோ்க்கையானது, தேசிய தோ்வு முகமை நடத்தும் இணை நுழைவுத்தோ்வான ஜேஇஇ மெயின் தரவரிசை/ தகுதியின் அடிப்படையில் நடைபெறும்.

ஜேஇஇ தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் சோ்வதற்கு மாணவா்கள் பிளஸ்2 வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். பட்டியலின/ பட்டியல் பழங்குடி மாணவா்கள் பிளஸ்2 வகுப்பு பொதுத் தோ்வில் 65% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தோ்வின் தேதியை அறிவித்தபோது 2021-22 கல்வி ஆண்டில் தகுதி பெறுவதற்கு 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதி தளா்த்தப்படுவதாக மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com