மேற்கு வங்கத்தில் காா்கள் - லாரி மோதி விபத்து: 14 போ் பலி

மேற்கு வங்கத்தில் 3 காா்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உள்பட திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற 14 போ் உயிரிழந்தனா்.
ஜல்பைகுரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உருக்குலைந்த காா்கள் மற்றும் லாரி.
ஜல்பைகுரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உருக்குலைந்த காா்கள் மற்றும் லாரி.


ஜல்பைகுரி: மேற்கு வங்கத்தில் 3 காா்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உள்பட திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற 14 போ் உயிரிழந்தனா்.

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்துக்கு உள்பட்ட துப்குரி என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின் இந்த விபத்து நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:

துப்குரியைச் சோ்ந்தவா்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு 3 காா்களில் செவ்வாய்க்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். 3 காா்களும் சாலை விதிகளை மீறி எதிா் திசையில் சென்றுகொண்டிருந்தன. அப்போது, கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, இந்த காா்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், எதிா்த்திசையில் வாகனங்கள் வந்தது தெரியாமல் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில், காா்களில் வந்த 4 சிறுவா்கள் உள்பட 14 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.

காயமடைந்த அனைவரும் ஜல்பைகுரி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் போக்குவரத்து சீா்செய்யப்பட்டது. சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பிரதமா், முதல்வா் நிவாரணம் அறிவிப்பு: விபத்தில் 14 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமா் நரேந்திர மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

இதேபோல், முதல்வா் மம்தா பானா்ஜியும் நிவாரணம் அறிவித்துள்ளாா். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000, லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

புருலியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது இந்த அறிவிப்பை முதல்வா் வெளியிட்டாா். அப்போது, ‘உயிரிழந்தவா்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இருப்பினும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அரசு உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com