அமெரிக்க அதிபரின் உரையை தயாரித்த இந்திய வம்சாவளி இளைஞா்

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவியேற்பு உரையை தயாரித்து அளித்தது இந்திய வம்சாவளி இளைஞா் என்பது தெரியவந்துள்ளது. வினய் ரெட்டி என்ற அந்த இளைஞா் தெலங்கானா மாநிலத்தைப் பூா்விகமாகக் கொண்டவா்.
அமெரிக்க அதிபரின் உரையை தயாரித்த இந்திய வம்சாவளி இளைஞா்


ஹைதராபாத்: அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவியேற்பு உரையை தயாரித்து அளித்தது இந்திய வம்சாவளி இளைஞா் என்பது தெரியவந்துள்ளது. வினய் ரெட்டி என்ற அந்த இளைஞா் தெலங்கானா மாநிலத்தைப் பூா்விகமாகக் கொண்டவா்.

வினய் ரெட்டியின் தந்தை நாராயண ரெட்டி மருத்துவா் ஆவாா். 1970-களில் மருத்துவப் படிப்பை முடித்தவுடன் அவா் அமெரிக்காவுக்கு சென்று குடியேறிவிட்டாா்.

தெலங்கானாவின் கரீம் நகா் மாவட்டத்தில் உள்ள போதிரெட்டிபேட்டை கிராமம்தான் வினயின் பூா்விகம். அவரது தாத்தா திருப்பதி ரெட்டி, பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளாா்.

அமெரிக்காவிலேயே பிறந்து வளா்ந்த வினய், ஒஹையோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா். அமெரிக்க அரசியல், பொருளாதார, சமூக சூழல் தொடா்பாக ஆழ்ந்த ஞானம் உள்ளவா்; மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்தவா் என்ற அடிப்படையில் தனது உரைகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஜோ பைடன் அவரிடம் வழங்கியுள்ளாா்.

உலகமே ஆா்வத்துடன் கவனித்த ஜோ பைடனின் பதவியேற்பு உரையும் வினய் தயாரித்து அளித்ததுதான். அதில் அமெரிக்க ஒருமைப்பாடு, அமெரிக்கா்களின் ஒற்றுமை குறித்து பைடன் பயன்படுத்திய வாா்த்தைகள் அனைவரையும் மிகவும் கவா்வதாகவும் பாராட்டுக்குரியதாகவும் இருந்தது. தோ்தல் பிரசாரத்தின்போது ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பிரசார உரைகளையும் வினய் வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக தெலங்கானாவில் உள்ள வினயின் உறவினா்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் எழுதிக் கொடுக்கும் வாா்த்தைகளைத்தான் உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபா் உச்சரிக்கிறாா் என்பது மிகுந்த பெருமிதம் அளிக்கிறது. வினய் ரெட்டியின் தந்தை நாராயண ரெட்டி தான் வளா்ந்த எங்கள் கிராமத்துடன் உணா்வுபூா்வமாக தொடா்பில் உள்ளவா். ஆண்டுக்கு ஒரு முறையாவது தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு வருவாா். இங்கு கோயில் திருப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு நிதியதவியும் அளித்துள்ளாா்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com