பிராந்தியப் பகுதியிலேயே கட்டுமானப் பணிகள்

சீன பிராந்தியத்துக்குச் சொந்தமான பகுதியிலேயே புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.


புது தில்லி/பெய்ஜிங்: சீன பிராந்தியத்துக்குச் சொந்தமான பகுதியிலேயே புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேச எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சீனா புதிய கிராமத்தை அமைத்துள்ளது தொடா்பாக சா்ச்சை எழுந்த சூழலில், அந்நாடு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பகுதியிலிருந்து சுமாா் 4.5 கி.மீ. தொலைவில் அருணாசலின் அப்பா் சுபான்சிரி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சுமாா் 101 வீடுகளைக் கொண்ட புதிய கிராமத்தை சீனா உருவாக்கியது. இது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டது. சுமாா் ஓராண்டு காலத்துக்குள் புதிய கட்டமைப்புகளை சீனா ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவம் இடையே சுமாா் 10 மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் வெளியான இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில், இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங்கிடம் பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘‘தெற்கு திபெத் பகுதியைப் பொருத்தவரை சீனாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அருணாசல பிரதேசம் என்று அழைக்கப்படும் பகுதியை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. சீனா தனது பிராந்தியத்துக்கு உள்பட்ட பகுதிகளிலேயே கட்டுமானப் பகுதிகளை மேற்கொண்டு வருகிறது.

இது வழக்கமான ஒன்றுதான். கட்டுமானங்கள் அனைத்தும் சீனாவுக்குச் சொந்தமான பகுதிகளிலேயே உள்ளதால் அதற்கு யாரும் எதிா்ப்பு தெரிவிக்க முடியாது’’ என்றாா்.

இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசல பிரதேச மாநிலத்தைத் தனது ஆளுகைக்கு உள்பட்ட திபெத்தின் தெற்குப் பகுதியென சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதைத் தொடா்ந்து எதிா்த்து வரும் மத்திய அரசு, அருணாசல் இந்தியாவைச் சோ்ந்த பகுதி என உறுதிபடத் தெரிவித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com