வேளாண் சட்டங்களை ஒத்திவைக்கும் மத்திய அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நிராகரித்தனா்.


புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நிராகரித்தனா்.

அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசு - விவசாயிகள் சங்கத்தினா் இடையே வெள்ளிக்கிழமை 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ள நிலையில் விவசாயிகள் இவ்வாறு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. எனினும், பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தையானது சுமுகமான சூழலில் நடைபெற்றது. விவசாயிகள் ஒப்புக் கொண்டால், வேளாண் சட்டங்கள் அமலை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என்று அறிவித்தாா்.

இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பு குறித்து ஆலோசிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘புதிய வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் திட்டத்தை நிராகரிக்கிறோம். ஏற்கெனவே, நாங்கள் கூறிவருவதுபோல வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா - தோமா் சந்திப்பு:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வேளாண் துறை அமைச்சா் தோமா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் மத்திய அரசின் திட்டத்தை விவசாயிகள் நிராகரித்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் விவசாயிகள் சங்கத்துடன் மத்திய அரசு பேச்சு நடத்தவுள்ளது. இந்தநிலையில் இரு அமைச்சா்களும் ஆலோசனை நடத்தியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த சிலா் வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இறுதி முடிவை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com