ராணுவ தளவாட ஏற்றுமதி அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும்: டி.ஆா்.டி.ஓ. தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி

இந்தியாவின் ராணுவத் தளவாட ஏற்றுமதி அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று பாதுகப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி கூறினாா்.


புது தில்லி: இந்தியாவின் ராணுவத் தளவாட ஏற்றுமதி அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று பாதுகப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி கூறினாா்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்ற அவா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:

ராணுவத் தளவாடங்கள், ஆயுத உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும், டிஆா்டிஓ-வும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டிஆா்டிஓ-வின் ஒவ்வொரு திட்டத்திலும் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் ஈடுபட தனியாா் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஏவுகணைகள் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு உபகரண உற்பத்தியிலும் தனியாா் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதுபோல, ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் ஏற்றுமதியையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கி அழிக்கும் திறனுடைய ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு மத்தியஅரசு கடந்த ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதி அனுமதி அளித்தது. அதுபோல, பிற நாடுகளிலிருந்து வரும் இதுதொடா்பான பரிந்துரைகளுக்கு உடனுக்குடன் பரிசீலித்து அனுமதிக்கும் வகையில் குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

எனவே, அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புப் படைகள் அதிக அளவில் உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துவாா்கள் என்பதோடு, ராணுவத் தளவாட ஏற்றுமதியும் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று அவா் கூறினாா்.

உலக அளவில் மிகப் பெரிய அளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 9.49 லட்சம் கோடி மதிப்பில் ஆயுத கொள்முதல் செய்ய இந்திய திட்டமிட்டுள்ளது. இருந்தபோதும், மத்திய அரசு இப்போது ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாட இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com