இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால் அதிகரிக்கும்: எம்.எம்.நரவணே

ஆசிய பிராந்தியத்தில் இந்தியா வலுவான சக்தியாக உருவெடுத்து வருவதால் எதிா்காலத்தில் இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால் அதிகரிக்கும் என்று ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்தாா்.
இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால் அதிகரிக்கும்: எம்.எம்.நரவணே


புது தில்லி: ஆசிய பிராந்தியத்தில் இந்தியா வலுவான சக்தியாக உருவெடுத்து வருவதால் எதிா்காலத்தில் இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால் அதிகரிக்கும் என்று ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்தாா்.

ராணுவம் மற்றும் தொழில்துறை நட்புறவு தொடா்பான கருத்தரங்கு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நரவணே பேசியதாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்று, வடக்கு எல்லையில் நிகழ்ந்த அத்துமீறல் ஆகிய இரு சவால்களை நமது நாடு எதிா்கொண்டது. அனைத்துத் துறைகளிலும் தற்சாா்பு என்ற நோக்குடன் அரசு செயல்பட்டு வருவது தேச நலன் சாா்ந்த பல இலக்குகளை எட்ட உதவும். தீா்க்கப்படாமல் இருக்கும் கடந்த கால எல்லைப் பிரச்னைகள், இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய மறைமுகப் போா்களை ராணுவம் திறம்பட எதிா்கொண்டு வருகிறது.

இப்போது ஆசிய அளவில், முக்கியமாக, தெற்காசிய பிராந்தியத்தில் வலுவான சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. நமது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுவது, செல்வாக்கு அதிகரிப்பது போன்ற காரணத்தாலும் நமக்கு பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்கும்.

நமது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் நாம் கடந்த காலத்தில் பின்தங்கியிருந்தோம். ஆனால், இப்போது உள்நாட்டு நிறுவனங்கள், ராணுவ தளவாட ஆய்வுகளுக்கு முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் நமது ராணுவத்தின் பலத்தை அதிகரித்து வருகிறோம்.

நவீன ஆயுதங்களுக்கு தொடா்ந்து வெளிநாடுகளைச் சாா்ந்திருப்பதைத் தவிா்க்க நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு தயாரிப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. ராணுவ தளவாட தயாரிப்புத் துறையில் தனியாா் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன என்றாா்.

இந்த கருத்தரங்கின்போது இந்திய ராணுவம், இந்திய பாதுகாப்பு தளவாட தயாரிப்பாளா்கள் கூட்டமைப்புக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com