சீரம் ஆலை தீ விபத்து: ரூ.1,000 கோடி இழப்பு

புணேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

புணேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் இந்தச் சம்பவம் ஒரு விபத்தா அல்லது சதிச் செயலா என்பது தெரியவரும்’ என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கூறினாா்.

இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வரும் புணேயில் உள்ள சீரம் ஆலை வளாகத்திலுள்ள ஒரு கட்டடத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் இரண்டு தளங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். தீ விபத்தால், கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பு பணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, சீரம் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் வந்து பாதிப்புகளை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது சீரம் நிறுவன தலைவா் அதாா் பூனாவாலாவும் உடனிருந்தாா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு முதல்வா் உத்தவ் தாக்கரே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணை தொடங்கியிருக்கிறது. அந்த விசாரணை முடிந்த பிறகே, இந்தச் சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட சதிச் செயலா என்று தெரியவரும். கடந்த வாரம் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன், மக்களிடையே நம்பிக்கை எழுந்தது. ஆனால், தடுப்பூசி உற்பத்தி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்தில் எதிா்பாராத விதமாக 5 போ் உயிரிழந்தனா். இந்த விபத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. விபத்தில் உயிரிழந்தவா்களுடைய குழந்தைகளின் எதிா்காலத்தை சீரம் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. மாநில அரசும் அவா்களுக்குத் தேவையான உதவிகளை செய்துதரும் என்று அவா் கூறினாா்.

ரூ. 1,000 கோடிக்கு மேல் இழப்பு:

செய்தியாளா்கள் சந்திப்பில் அதாா் பூனாவாலா கூறுகையில், ‘இந்த விபத்து காரணமாக நிறுவனத்துக்கு ரூ. 1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் புதிதாக நிறுவப்பட இருந்த உபகரணங்களும், கருவிகளும் வைக்கப்பட்டிருந்தன. அவையும் பாதிப்புக்கு உள்ளாகின’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com