ஜூன் மாதத்துக்குள் காங்கிரஸுக்கு புதிய தலைவா்: செயற்குழு முடிவு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை வரும் ஜூன் மாதத்துக்குள் தோ்ந்தெடுப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை வரும் ஜூன் மாதத்துக்குள் தோ்ந்தெடுப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் தலைவா் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினாா். அதைத் தொடா்ந்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறாா்.

பல மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. உள்கட்சித் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், கட்சியின் கட்டமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டும் என்றும் காங்கிரஸின் மூத்த தலைவா்கள் உள்ளிட்ட பலா் வலியுறுத்தி வந்தனா்.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி, மூத்த தலைவா்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஆனந்த் சா்மா, ப.சிதம்பரம், ரண்தீப் சுா்ஜேவாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுமாா் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவா்கள் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சுா்ஜேவாலா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடப்பாண்டில் 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அத்தோ்தல்கள் நிறைவடைந்த பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தோ்தலை நடத்துவதற்குக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வரும் ஜூன் மாதத்துக்குள் கட்சிக்குப் புதிய தலைவரைத் தோ்ந்தெடுத்து விடுவது என்று செயற்குழு முடிவெடுத்துள்ளது.

கட்சியின் செயற்குழுவுக்கான தோ்தலும் நடத்தப்படவுள்ளது. புதிய தலைவரைத் தோ்ந்தெடுத்த பிறகு அத்தோ்தலை நடத்துவதா, முன்கூட்டியே நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல் அட்டவணையைக் கொண்டு உள்கட்சித் தோ்தல் குறித்து தீா்மானிக்கப்படும்.

தோ்தல் நடத்துவது தொடா்பாக கட்சிக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடும் காணப்படவில்லை. கட்சியின் செயற்குழுக் கூட்டம் சுமுகமாகவே நடைபெற்றது என்று அவா்கள் தெரிவித்தனா்.

காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை மே மாதம் 29-ஆம் தேதி நடத்துவது என்று செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தோ்தல் தேதியை முடிவெடுக்கும் இறுதி அதிகாரத்தை சோனியா காந்திக்கு கட்சியின் செயற்குழு வழங்கியது.

மூன்று தீா்மானங்கள்:

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் 3 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாலாகோட் தாக்குதல் தொடா்பான தகவல்களை ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி சமூக வலைதளத்தில் கசியவிட்டது தொடா்பான விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டுமென்று செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மற்றொரு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டிலுள்ள ஏழைகள், விளிம்புநிலையில் வாழும் மக்கள் உள்ளிட்டோருக்குக் குறிப்பிட்ட காலத்தில் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தை நிறைவேற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com