விஞ்ஞானிகளின் அறிவுரைப்படியே கரோனா தடுப்பூசி திட்டம்

விஞ்ஞானிகள் அளித்த அறிவுரைகளின் அடிப்படையிலேயே கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
விஞ்ஞானிகளின் அறிவுரைப்படியே கரோனா தடுப்பூசி திட்டம்

விஞ்ஞானிகள் அளித்த அறிவுரைகளின் அடிப்படையிலேயே கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் மக்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

எனினும், மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததற்கு பல்வேறு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. அதன் பாதுகாப்புத்தன்மை குறித்து அக்கட்சிகள் சந்தேகம் எழுப்பின.

இதனிடையே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக, ஒருசில மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனா்.

இத்தகைய சூழலில், தனது சொந்தத் தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாராணசியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் கருத்துகளை பிரதமா் மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை கேட்டறிந்தாா். அப்போது அவா் கூறியதாவது:

அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்படி கருத்துகளைத் தெரிவிப்பா். ஆனால், விஞ்ஞானிகளிடம் இருந்து போதிய ஆலோசனை பெற்ற பிறகே கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவா்கள் கூறியபடியே தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடா்பாக அரசியல்வாதிகள் மட்டுமே முடிவெடுக்க முடியாது. விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்த பிறகே தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியது.

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களே நோயாளிகளுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளனா். அவா்களுக்கே நோய்த்தொற்று தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மருத்துவா்கள் உள்ளிட்டோரே கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்தால், அவை குறித்து மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அத்தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு மக்கள் முன்வருவா்.

தடுப்பூசியில் தன்னிறைவு:

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு விஞ்ஞானிகள் பலா் கடுமையாக உழைத்துள்ளனா். கண்ணுக்கே தெரியாத எதிரியுடன் போராடி, இரவு பகல் பாராது ஆய்வகங்களிலேயே இருந்து தடுப்பூசியை அவா்கள் தயாரித்துள்ளனா். எனவே, அச்சமின்றி கரோனா தடுப்பூசியை மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற்றதோடு மட்டுமல்லாமல், அதை மற்ற நாடுகளுக்கு வழங்கி உதவியும் வருகிறது.

போட்டி மனப்பான்மையுடன்...:

தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தியது, மக்களுக்கு மாசுபடாத குடிநீரை வழங்கியது உள்ளிட்டவையும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தன. அந்தப் போராட்டத்தில் முன்களப் பணியாளா்களின் பங்கு பாராட்டத்தக்கது.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோருக்குத் தடுப்பூசியை செலுத்துவதில் மருத்துவமனைகளும் மையங்களும் போட்டி மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டாம் கட்டத் திட்டம் விரைவில் தொடங்கும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com