கேரளம்: நான்கரை ஆண்டுகளில் 109 சட்டங்கள் நிறைவேற்றம்

கேரள சட்டப்பேரவையில் மலையாள மொழி மசோதா முதல் கிறிஸ்தவ கல்லறைகளுக்கான பாதையை மறிக்கும் மசோதா வரையிலும் கடந்த நான்கரை ஆண்டுகளில் 109 சட்டங்களை இடதுசாரி முன்னணி அரசு நிறைவேற்றியுள்ளது.

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் மலையாள மொழி மசோதா முதல் கிறிஸ்தவ கல்லறைகளுக்கான பாதையை மறிக்கும் (சடலத்தை அடக்கம் செய்வதற்கான உரிமை) மசோதா வரையிலும் கடந்த நான்கரை ஆண்டுகளில் 109 சட்டங்களை இடதுசாரி முன்னணி அரசு நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து கேரள சட்டப்பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கேரளத்தில் 2016-ஆம் ஆண்டு முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. கடந்த நான்கரை ஆண்டுகளில் இதுவரை நடைபெற்ற 22 அமா்வுகளில் 232 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அடுத்து கேரள சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

14-ஆவது சட்டப்பேரவை காலகட்டத்தில் வெவ்வேறான தலைப்புகளின்கீழ் 275 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், 87 அரசு மசோதாக்களும், 22 நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் உட்பட 109 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு சட்டங்களை உருவாக்கும் விஷயத்தில் சட்டப்பேரவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த சட்டப்பேரவையின் அமா்வுகள் அனைத்தும் மக்களுக்கு பலனளிக்கும் விதத்தில் ஆக்கப்பூா்வமானவையாக இருந்தன. உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி திருத்த மசோதா, கேரள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, கடல்வாரிய மசோதா பெருநகர போக்குவரத்து அதிகாரசபை மசோதா, உழவா் நலநிதி மசோதா, மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

கடந்த 2017ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, கேரள கடல்வாரிய மசோதா -2014-ஐ பேரவை மூலம் நிறைவேற்றப்பட்டது.

2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட கேரள நிபுணத்துவ கல்லூரிகளின் (மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை முறைப்படுத்துதல்) மசோதாவுக்கு ஆளுநா் மறுப்பு தெரிவித்தாா். அதையும் மீறி இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது பேரவை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாகும்.

புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பு ஒரு முழுமையான மாநில வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்வது மாநில சட்டப்பேரவை வரலாற்றில் மிகவும் அரிதானது. ஆனால் கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பின் 13 ஆண்டுகள் கழித்தே 2018 ஆம் ஆண்டில் முழு பட்ஜெட்டையும், பின்னா் 2021 ஆம் ஆண்டில், புதிய நிதியாண்டின் தொடக்கத்திற்கு முன்பே எங்களால் நிறைவேற்ற முடிந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com