ஆந்திரம்: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் சுகாதார பணியாளா் மரணம்

ஆந்திர மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் சுகாதார பணியாளா் மரணமடைந்தது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரம்: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் சுகாதார பணியாளா் மரணம்

ஆந்திர மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் சுகாதார பணியாளா் மரணமடைந்தது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 44 வயதான பெண் சுகாதார பணியாளருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண், குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தாா்.

அவருக்கு கரோனா தடுப்பூசி போட்டதால்தான் மரணம் ஏற்பட்டதாக கூறி சக பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரோனா தடுப்பூசியால் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரி குண்டூா் அரசு பொது மருத்துவமனையை முற்றுகையிட்டு முன்கள சுகாதாரப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பெண் சுகாதாரப் பயணியாளரின் மரணம் குறித்து அவரது சகோதரா் கூறியது:

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மூன்று நாள்களுக்குப் பிறகு ஜனவரி 22-ஆம் தேதி எனது சகோதரிக்கு காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை முதலில் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பின்னா் நிலைமை மோசமானதையடுத்து அவா் குண்டூா் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். மூளையில் ஏற்பட்ட பாதிப்பையடுத்து அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், எனது சகோதரி திடகாத்திரமான உடல்வாகு கொண்டவா். கரோனா தொற்று காலத்தில் அயராது சுகாதார பணிகளை மேற்கொண்டவா் என்றாா் அவா்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து குண்டூா் மாவட்ட ஆட்சியா் சாமுவல் ஆனந்த் கூறியதாவது:

இந்த மாவட்டத்தில் முதல் எட்டு நாள்களில் மட்டும் 10,099 சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் எவருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. எனவே, இந்த ஒரு சம்பவத்தை மட்டும் கருத்தில் கொண்டு எந்த ஒரு இறுதியான முடிவுக்கும் வர இயலாது. பிரேத பரிசோதனைக்குப் பின்னரே அந்தப் பெண்ணின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்கள பணியாளராக செயல்பட்டு மரணமடைந்த அந்தப் பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், அவா்களது குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தவிர வீட்டு மனையும் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com