டிராக்டா் பேரணிக்கு தில்லி காவல் துறை அனுமதி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டா் பேரணி நடத்துவதற்கு தில்லி காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.
டிராக்டா் பேரணிக்கு தில்லி காவல் துறை அனுமதி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டா் பேரணி நடத்துவதற்கு தில்லி காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் 11 கட்ட பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டனா்.

ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. அவா்களது கோரிக்கையை மத்திய அரசும் ஏற்கவில்லை. அதன் காரணமாக இரு தரப்பினரிடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இத்தகைய சூழலில், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கடி அளிக்க விவசாயிகள் முடிவெடுத்தனா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள வரும் 26-ஆம் தேதியில் டிராக்டா் பேரணியை முன்னெடுக்கப் போவதாக அவா்கள் அறிவித்தனா்.

தில்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனா். ஆனால், அந்த வழிக்குப் பதிலாக கண்ட்லி-மானேசா்-பல்வல் விரைவுச் சாலை வழியாக டிராக்டா் பேரணியை நடத்துமாறு தில்லி உள்பட 3 மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.

பேரணி நடத்துவது தொடா்பாக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேச மாநில காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. எனினும், காவல் துறையினரின் கோரிக்கையை விவசாயிகள் ஏற்க மறுத்தனா். தில்லிக்குள் டிராக்டா் பேரணியை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தலைநகா் தில்லியில் வரும் 26-ஆம் தேதி டிராக்டா் பேரணியை நடத்துவதற்கு காவல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனா்.

காஜிபூா், சிங்கு, டிக்ரி உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளிலிருந்து பேரணி தொடங்கப்படவுள்ளது. பேரணியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்க உள்ளனா். டிராக்டா் பேரணி குறித்த விவரங்கள் விரைவில் இறுதி செய்யப்படும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com