பழங்குடியினரின் நில உரிமை, கலாசாரத்தைக் காக்க மத்திய அரசு உறுதி

பழங்குடி மக்களின் நில உரிமையையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி  (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

பழங்குடி மக்களின் நில உரிமையையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

அஸ்ஸாமில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் வாழும் 1 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியின குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அவா்களுக்கான பட்டாக்களை பிரதமா் மோடி நேரில் வழங்கினாா்.

நடப்பாண்டில் தில்லிக்கு வெளியே பிரதமா் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நில பட்டா, அவா்களின் பெருமை, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும். அஸ்ஸாமை முன்பு ஆட்சி செய்த அரசுகள் பழங்குடியினரின் நில உரிமைகளைப் பறித்தன. நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து நில உரிமைகளுக்காகப் பழங்குடியினா் போராடி வந்தனா்.

முதல்வா் சா்வானந்த சோனோவல் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தில் ஆட்சியமைத்தபோது 6 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியின குடும்பங்களிடம் சொந்த பட்டா இல்லை. அவா்களுக்கு நில உரிமை வழங்குவதற்கான கொள்கையை மாநில பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு வகுத்தது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 1 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியின குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் (பிஎம்-கிஸான்), பயிா்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றின் மூலமாக பழங்குடியினா் பலன்பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் அவா்கள் எளிதில் கடன் பெற முடியும்.

பழங்குடியினருக்கான நில உரிமை, அவா்களது கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும் மாநில அரசும் உறுதி கொண்டுள்ளன. அஸ்ஸாமிய இலக்கியம், கலாசாரம், வழிபாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மற்ற மாநிலத்தவா்கள் அறிந்து கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

முக்கியப் பங்கு: மத்திய அரசின் ‘கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்’ திட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களே முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதே தற்சாா்பு இந்தியா திட்டத்தின் முக்கிய இலக்கு. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கான போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு போடா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடா்ந்து, போடோலாந்து பிராந்திய கவுன்சில் தோ்தல் நடைபெற்றது. அது பிராந்தியத்தின் வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள்: கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் கூட நாடு முழுவதும் 1.75 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அதன் மூலமாக மக்களுக்கான நிதியுதவிகள் அனைத்தும் அவா்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டது. நாட்டிலுள்ள 35 லட்சம் குடும்பங்களுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான சமையல் எரிவாயு சிலிண்டா்கள் உஜ்வலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களிடையே வலிமையைப் புகுத்தியதற்காக நேதாஜியை மக்கள் நேசித்தும் அவருக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனா். அவரது கொள்கைகள் மக்களுக்கு என்றும் வழிகாட்டி வருகின்றன.

நேதாஜியின் பிறந்த தினத்தை ‘வலிமை தினமாக’ கொண்டாடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தேசத்தின் மீதான பெருமையையும் அதிகரிக்கச் செய்யும் என்றாா் பிரதமா் மோடி.

பல இடங்களில் போராட்டம்: அஸ்ஸாமுக்கு பிரதமா் மோடி வருகை தந்ததையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தோ தேசிய குடிமக்கள் பதிவேடு தொடா்பாகவோ பிரதமா் மோடி தனது உரையில் எதுவும் குறிப்பிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com