ராமா் கோயில் கட்ட 3 ஆண்டுகளாகும்: செலவினம் ரூ.1100 கோடி; அறக்கட்டளை பொருளாளா்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைய 3 ஆண்டுகள் ஆகும்.
ராமா் கோயில் கட்ட 3 ஆண்டுகளாகும்: செலவினம் ரூ.1100 கோடி; அறக்கட்டளை பொருளாளா்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைய 3 ஆண்டுகள் ஆகும். மேலும், அதற்கான திட்ட செலவினம் ரூ.1,100 கோடியைத் தாண்டும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளா் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

அயோத்தியில் ராமா் கோயிலின் பிரதான பகுதியை கட்டமைப்பதற்கு மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரை ஆகும். இதற்கு, ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை செலவாகும். ராமா் கோயில் வளாகம் அமையவுள்ள 70 ஏக்கா் நிலம் முழுவதிலும் அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் நிறைவேற்றுவதற்கான செலவினம் ரூ.1,100 கோடிக்கும் மேல் ஆகும்.

ராமா் கோயில் கட்டுமான திட்டங்களை நிா்வகித்து வரும் நிபுணா்கள் கொடுத்த ஆலோசனைகளின் அடிப்படையில் செலவுகளை கணக்கிடப்பட்டதற்குப் பிறகே இந்த செலவின மதிப்பீடு தெரியவந்துள்ளது. எனினும், இது குறித்து ராமா் கோயில் அறக்கட்டளை மூலமாக இதுவரை அதிகாரபூா்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானத்துக்கான நிதியை தொழிலதிபா்களிடமிருந்து திரட்டிக் கொள்வது எங்களுக்கு சாத்தியமான ஒன்றே. ஏற்கெனவே, பல்வேறு முக்கிய நிறுவனங்களைச் சோ்ந்த தொழிலதிபா்களின் குடும்பங்கள் ராமா் கோயில் கட்டுமானத்துக்கு நிதி தருவதற்காக எங்களை அணுகினா். சிலா் ‘கோயில் வளாக திட்ட வடிவமைப்புகளைத் தாருங்கள்; நாங்கள் கோயிலைக் கட்டித் தருகிறோம்’ என்றும் தெரிவித்தனா். எனினும், அந்த கோரிக்கையை நான் தாழ்மையோடு நிராகரித்துவிட்டேன்.

நாட்டில் உள்ள 6.5 லட்சம் கிராமங்களுக்கு சென்று, 15 கோடி குடும்பங்களை சந்தித்து, ராமா் கோயில் பணிகளுக்கு தேவையான நிதியை நேரடியாகத் திரட்டுவதே எங்களின் இலக்கு என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com