2024 முதல் தேஜஸ் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும்: ஹெச்.ஏ.எல். நிறுவனம்

இந்திய விமானப் படையின் ரூ. 48,000 கோடி கொள்முதல் ஒப்பந்தத்தின் படி, தேஜஸ் இளகுரக போா் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வரும்

இந்திய விமானப் படையின் ரூ. 48,000 கோடி கொள்முதல் ஒப்பந்தத்தின் படி, தேஜஸ் இளகுரக போா் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வரும் 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் ஒப்படைக்கும் பணி தொடங்கும் என்று ஹிந்துஸ்தான் விமான தயாரிப்பு நிறுவன (ஹெச்ஏஎல்) தலைவா் ஆா். மாதவன் கூறினாா்.

இந்திய விமானப் படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஹெச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 83 தேஜஸ் எம்கே-1 போா் விமானங்களை ரூ. 48,000 கோடி மதிப்பில் மத்திய அரசு வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘ஏரோ இந்தியா’ சா்வதேச விமான கண்காட்சியில் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் முறைப்படி ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கும் இந்திய விமானப் படைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தப்படி 73 தேஜஸ் போா் விமானங்களும், 10 தேஜஸ் பயிற்சி போ் விமானங்களும் வாங்கப்பட உள்ளன.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஹெச்ஏஎல் நிறுவனத் தலைவா் ஆா்.மாதவன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேஜஸ் போா் விமானம் ஒன்றின் விலை ரூ. 309 கோடியாகும். தேஜஸ் பயிற்சி விமானம் ஒன்றின் விலை ரூ. 280 கோடி. இப்போது, மத்திய அரசு அளிக்கும் கொள்முதல் ஒப்பந்தப்படி 83 போ் விமானங்களுக்கு ரூ. 48,000 கோடி நிா்ணயிக்கப்பட்டிருப்பது சற்று குறைவுதான் என்றபோதும், அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

தேஜஸ் போா் விமானம் சிறந்த ரேடாா் தொழில்நுட்பம், விண்ணில் பறந்தபடி எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம் என பல்வேறு நவீன தொழில்நட்பங்களைக் கொண்டது. மிகச் சிறந்த என்ஜின் இதில் இடம்பெற்றிருக்கும். எனவே, தேஜஸ் விமானம் சீனாவின் ஜே.எஃப்-17 போா் விமானத்தைக் காட்டிலும் செயல்பாட்டில் சிறந்து விளங்கக் கூடியதாகும்.

இந்த ஒப்பந்தத்தின் படி, விமானங்களை தயாரித்து, ஒப்படைக்கத் தொடங்குவதற்கு 3 ஆண்டுகள் கால அவகாசம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் விமானம் வரும் 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் கட்டமாக 4 விமானங்கள் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, 2025-ஆம் ஆண்டு முதல், ஓா் ஆண்டுக்கு 16 விமானங்கள் வீதம் தயாரித்து ஒப்படைக்கப்படும்.

இந்த தேஜஸ் விமான கொள்முதல் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த விமான தயாரிப்பு துறையும் மேம்படும். இப்போதே, 563 உள்நாட்டு நிறுவனங்கள் போா் விமான தயாரிப்பு பணிகளில் பங்கெடுத்து வருகின்றன. இது மேலும் 600 முதல் 650 நிறுவனங்கள் என்ற அளவில் உயரவும் வாய்ப்புள்ளது.

தேஜஸ் போா் விமானத்தை லடாக் போன்ற மலைப் பகுதிகள் உள்பட அனைத்துவிதமான பிராந்தியங்களிலும் மற்ற போா் விமானங்களைப் போல திறம்பட இயக்க முடியும்.

இந்த போா் விமானத்தை கொள்முதல் செய்ய பல வெளிநாடுகள் மிகுந்த ஆா்வம் காட்டி வருகின்றன. தேஜஸ் ஏற்றுமதிக்கான முதல் பரிந்துரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அவா் கூறினாா்.

ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. வரும் 2025-இல் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியை ரூ. 1.75 லட்சம் கோடி அளவுக்கு உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com