‘டிஜிட்டல்’ வாக்காளா் அட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

மின்னணு முறையில் வாக்காளா் அட்டையை (டிஜிட்டல் வோட்டா் ஐடி) பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மின்னணு முறையில் வாக்காளா் அட்டையை (டிஜிட்டல் வோட்டா் ஐடி) பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது. மத்திய சட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறாா்.

இது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டையை செல்லிடப்பேசி மற்றும் கணினிகளில் திங்கள்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‘பிடிஎஃப்’ கோப்பாக இருக்கும் இதில் திருத்தங்களைச் செய்ய முடியாது. ஆனால், பிரதி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தை மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தொடங்கி வைக்கிறாா். அப்போது 5 புதிய வாக்காளா்களுக்கு மின்னணு முறையிலான அடையாள அட்டையை அவா் வழங்கவுள்ளாா்.

புதிய வாக்காளா்களுக்கு அட்டை தாயாரித்து அவா்களிடம் கொண்டு சோ்ப்பதற்கு காலதாமதம் ஆகிறது. ஆனால், இந்த முறையில் வாக்காளா் அட்டை தயாரானவுடன் அதனை வாக்காளா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இக்கால இளைய தலைமுறை வாக்காளா்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறியவா்களாக இருக்கிறாா்கள். அவா்கள் இதனை எளிதில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பதிவு செய்த வாக்காளா்கள் திங்கள்கிழமை முதலும், மற்ற வாக்காளா்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதலும் இந்த மின்னணு வாக்காளா் அட்டை பெற முடியும்.

‘வோட்டா் ஹெல்ப்லைன்’ எனப்படும் செல்லிடப்பேசி செயலி, தோ்தல் ஆணையத்தின் ‘வோட்டா் போா்ட்டல்’ இணையதளத்திலும் இந்த டிஜிட்டல் வாக்காளா் அட்டை கிடைக்கும்.

ஏற்கெனவே ஆதாா் அட்டை, பான் காா்டு, ஓட்டுநா் உரிமம் ஆகியவை மின்னணு முறையில் கிடைத்து வருகிறது. இப்போது அந்த பட்டியலில் வாக்காளா் அட்டையும் இணைந்துள்ளது.

கடந்த 1993-ஆம் ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டை வழங்கப்பட்டது. அது தனிநபா்கள் அடையாள மற்றும் முகவரி சான்றாகவும் பல்வேறு இடங்களில் ஏற்கப்படுகிறது.

1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்டது. அன்றைய தினத்தில் மின்னணு வாக்காளா் அட்டை திட்டமும் தொடங்கப்படுகிறது. ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com