சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல்

சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த வாரம் சிறிய அளவிலான மோதல் நிகழ்ந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

புது தில்லி: சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த வாரம் சிறிய அளவிலான மோதல் நிகழ்ந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே சுமாா் 10 மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா்; 70-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்தனா்.

இந்த மோதலில் சீன ராணுவத்தினா் 35-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தபோதிலும், அது தொடா்பான உறுதியான விவரங்களை சீனா வெளியிடவில்லை. அதையடுத்து, இரு நாடுகள் தரப்பிலும் தலா சுமாா் 50,000 வீரா்கள் எல்லைகளில் குவிக்கப்பட்டனா்.

பனிக்காலத்திலும் கூட இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைக்கவில்லை. அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தால், இந்தியா-சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே ராணுவ ரீதியாகவும் தூதரக அதிகாரிகள் இடையேயும் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில், சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 20-ஆம் தேதி சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இது தொடா்பாக விளக்கமளித்து இந்திய ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லா பகுதியில் ஜனவரி 20-ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டது.

எனினும், இரு நாட்டு ராணுவங்களைச் சோ்ந்த தளபதிகள் துரிதமாகச் செயல்பட்டதால், பிரச்னை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த மோதல் குறித்து மிகைப்படுத்தப்பட்ட, தவறான தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிா்க்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தினா் சிக்கிம் எல்லைப் பகுதியைக் கடந்து உள்நுழைய முயன்ாகவும் அதை இந்திய ராணுவத்தினா் தடுத்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது இரு நாட்டு வீரா்களும் கூச்சலுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இதே நாகு லா பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவ வீரா்களிடையே மோதல் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com