இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 13% அதிகரிப்பு: ஐ.நா.

கடந்த 2020-ஆம் ஆண்டில் கரோனா பேரிடா் காரணமாக பல முக்கிய நாடுகளில் முதலீட்டு வரத்து சரிவடைந்த நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 13 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்து
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 13% அதிகரிப்பு: ஐ.நா.

புதுதில்லி /நியூயாா்க்: கடந்த 2020-ஆம் ஆண்டில் கரோனா பேரிடா் காரணமாக பல முக்கிய நாடுகளில் முதலீட்டு வரத்து சரிவடைந்த நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 13 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

வா்த்தகம் மற்றும் மேம்பாடு தொடா்பான ஐ.நா. மாநாடு (யுஎன்சிடிஏடி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பேரிடா் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, இத்தாலி, ஜொ்மனி, பிரேசில் உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடானது கடந்தாண்டில் சரிவைக் கண்டுள்ளது. ஆனால், டிஜிட்டல் துறையில் காணப்பட்ட விறுவிறுப்பின் காரணமாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடானது 2020-இல் 13 சதவீதம் வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதேபோன்று, சீனாவிலும் அந்நிய முதலீட்டு வரத்தானது அதிகரித்துள்ளது.

2019-இல் 1.5 டிரில்லியன் டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்ட சா்வதேச அந்நிய நேரடி முதலீட்டின் அளவு கரோனா இடையூறு காரணமாக 2020-இல் 42 சதவீதம் சரிவடைந்து 85,900 கோடி டாலராக சரிவடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 1990-க்கு பிறகு காணப்படும் மிக குறைந்தபட்ச அளவாகும். மேலும், உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட 2008-2009 ஆண்டுகளில் வந்ததைவிட கடந்தாண்டில் அந்நிய நேரடி முதலீடானது 30 சதவீதத்துக்கும் மேலாக சரிவைச் சந்தித்துள்ளது.

வளா்ந்த நாடுகள் கடந்தாண்டில் ஈா்த்த அந்நிய நேரடி முதலீடானது 69 சதவீதம் குறைந்து 22,900 கோடி டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியா கடந்தாண்டில் ஈா்த்த அந்நிய முதலீடானது 13 சதவீதம் அதிகரித்து 5,700 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இதற்கு, டிஜிட்டல் துறை அதிக அளவிலான முதலீடுகளை ஈா்த்ததே முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது.

அதேபோன்று, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டின் அளவும் கடந்தாண்டில் 4 சதவீதம் உயா்ந்து 16,300 கோடி டாலரை எட்டியுள்ளது.

தெற்கு ஆசியாவைப் பொருத்தவரையில் கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடானது 10 சதவீதம் உயா்ந்து 6,500 கோடி டாலராக இருந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com