ஊடக தீா்ப்பாயம் அமைக்கக் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஊடகங்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்க பிரத்யேக ஊடக தீா்ப்பாயம் அமைப்பது தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: ஊடகங்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்க பிரத்யேக ஊடக தீா்ப்பாயம் அமைப்பது தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, இந்திய பத்திரிகை கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளா்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊடகங்கள், குறிப்பாக மின்னணு ஊடகங்கள் கட்டுக்கு அடங்காத குதிரையை போல் செயல்பட்டு வருகின்றன. அவற்றை கட்டுக்குள் கொண்டுவர வேண்டியுள்ளது. இந்த மனு ஊடகங்களின் அடிப்படை உரிமைகளுக்கு கடிவாளமிட தாக்கல் செய்யப்படவில்லை. பொய்யான, கோபமூட்டுகிற, தனிநபரின் அந்தரங்கத்தில் தலையிடும் தகவல்களை வெளியிட்டால், அதற்கு ஊடகங்களை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்கள் சுயமாக ஒழுங்குப்படுத்திக் கொள்ளும் நடைமுறைகளை கொண்டுவருவதே இந்தப் பிரச்னைக்குத் தீா்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு செய்தால் தங்கள் மீதான புகாரை விசாரிப்பதில் ஊடகங்களே நீதிபதிகளாக செயல்படும்.

எனவே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(1)-இன் கீழ் தங்கள் உரிமைகளை ஒளிபரப்பாளா்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் பயன்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.

ஊடகங்கள் மீதான பாா்வையாளா்களின் புகாா்களை விசாரிப்பதற்கு சுதந்திரமான தீா்ப்பாயத்தை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அரசியலமைப்பின் குறிக்கோள்கள், அறிநெறிகளுக்கு எதிரான வகையில் ஊடகங்கள் செயல்படும்போது, அதுதொடா்பாக தீா்ப்பாயத்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், இந்திய பத்திரிகை கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளா்கள் கூட்டமைப்பு, செய்தி ஒளிபரப்பாளா்கள் சம்மேளனம், செய்தி ஒளிபரப்பு தர நிா்ணய ஆணையம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com