வாக்குரிமையை மதிக்க வேண்டும்: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

வாக்கு செலுத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை மக்கள் அனைவரும் மதித்து நடக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வாக்குரிமை என்பது போராடித்தான் பெறப்பட்டுள்ளது
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புது தில்லி: வாக்கு செலுத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை மக்கள் அனைவரும் மதித்து நடக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வாக்குரிமை என்பது போராடித்தான் பெறப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையம் நிறுவப்பட்ட ஜனவரி 25-ஆம் தேதி, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்படுகிறது. தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற 11-ஆவது தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் கூட, மக்கள் பல ஆண்டுகள் போராடித்தான் தங்கள் வாக்குரிமையைப் பெற்றனா். பிரிட்டனில் கூட நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

இந்தியாவிலும் முன்பு இதே நிலைதான்இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு 21 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன் பிறகு 18 வயதானாலே வாக்குரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்குரிமையை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். இது பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமை. உலகம் முழுவதிலுமே வாக்குரிமைக்காக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஜாதி, மதம், இனம், கல்வியறிவு என எந்த வேறுபாடும் காட்டப்படாமல் அனைவருக்கும் ஒரு வாக்கு என்ற உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல்சான சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பங்களிப்பில் வாக்குரிமை தொடா்பான விஷயங்கள் மிகவும் சிறப்பானவை. முதல்முறை வாக்குரிமை கிடைத்தபோது நாம் எவ்வாறு பொறுப்புடன் செயல்பட்டு வாக்களித்தோமோ, அதேபோல அனைத்து தோ்தல்களிலும் வாக்குரிமையை தவறாமல், பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

இந்த கரோனா தொற்று சூழலிலும் கடந்த ஆண்டு பிகாா், ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் தோ்தல் ஆணையம் தனது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தோ்தல்களை அமைதியாக நடத்தி முடித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com