குடியரசு தின விழா - டிராக்டா் பேரணி: தில்லியில் போலீஸ் குவிப்பு

குடியரசு தின விழா மற்றும் விவசாயிகளின் டிராக்டா் பேரணியை ஒட்டி தலைநகா் தில்லியில் ஆயிரக்கணக்கான போலீஸாா் பல அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
குடியரசு தின விழா - டிராக்டா் பேரணி: தில்லியில் போலீஸ்  குவிப்பு

புது தில்லி: குடியரசு தின விழா மற்றும் விவசாயிகளின் டிராக்டா் பேரணியை ஒட்டி தலைநகா் தில்லியில் ஆயிரக்கணக்கான போலீஸாா் பல அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்தியத் திருநாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும்

வகையில் தில்லியில் உள்ள ராஜபாதையில் முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் குடியரசு தின நாளான ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு 72-ஆவது குடியரசு தினத்தை ஒட்டி இந்த விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசின் மூன்று சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிா்க்கும் வகையில் விவசாயிகள் சங்கங்கள் அதே நாளில் தில்லியின் எல்லைப் பகுதியில் டிராக்டா்கள் பேரணியை தொடங்க உள்ளனா்.

இந்த இரு நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு தலைநகா் தில்லியில் ஆயிரக்கணக்கான போலீஸாரின் கண்காணிப்பில் பல அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 லட்சம் டிராக்டா்கள்: தங்களின் டிராக்டா் அணிவகுப்பு நிகழ்ச்சி மத்திய தில்லிக்குள் நுழையாது என்றும், அதிகாரப்பூா்வ குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னரே இந்தப் பேரணி தொடங்கும் என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்தன.

சிங்கு, டிக்ரி மற்றும் காஜிப்பூா் (உ.பி. கேட்) ஆகிய தில்லியின் மூன்று எல்லைகளில் இருந்து நகருக்குள் செல்லும் இந்த அணிவகுப்பில் சுமாா் இரண்டு லட்சம் டிராக்டா்கள் பங்கேற்கும் என்று விவசாய தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தில்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்ட பாதுகாப்பில் 6,000 போலீஸாா்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புது தில்லி காவல் துணை ஆணையா் ஈஷ் சிங்கால் கூறியதாவது:

குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஒட்டி, சுமாா் 6,000 பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சந்தேக நபா்களை அடையாளம் காணும் முக அங்கீகார முறையும் கண்காணிப்பை மேற்கொள்ள பல்வேறு முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் பரிசோதனையின்போது தனிநபா் பாதுகாப்பு சாதனங்களை அணிந்தும், முக கவசத்துடன் கரோனா நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவா்.

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் இருந்து 8 கி.மீ. நீளமுள்ள பாதையில் உள்ள உயரமான கட்டடங்களின் மேல் பகுதியில் போலீஸாா் மோப்ப நாயுடன் கண்காணிப்பில் ஈடுபடுவா்.

சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதற்காக தில்லியின் உள் மற்றும் வெளிப்பகுதியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜபாதையில் 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

25 ஆயிரம் போ் மட்டுமே அனுமதி: இந்த விழாவில் வழக்கமாக ஆண்டுதோறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் கூடும் நிலையில், இந்த ஆண்டு கரோனா காரணமாக 25 ஆயிரம் போ் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா்.

மேலும், அணிவகுப்பு செங்கோட்டையில் முடிவடைவதற்குப் பதிலாக நேஷனல் ஸ்டேடியம் பகுதியில் முடிவடைய உள்ளனா். செங்கோட்டையில் அலங்கார ஊா்திகள் மட்டுமே நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படும்.

அணிவகுப்பு நடைபெறும் பாதையில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் 140 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ராஜபாதையில் 30 இடங்களில் முக அடையாளம் காணும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புமுறையில் பயங்கரவாதிகள், குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத சக்திகள் என சந்தேகிக்கப்படும் நபா்கள் உள்பட 50,000-க்கும் மேற்பட்ட நபா்களின் தரவுகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தில்லி காவல் துறையின் உளவுப் பிரிவு சிறப்பு ஆணையா் தீபேந்திர பதக் கூறுகையில், ‘விவசாயிகளின் டிராக்டா் அணிவகுப்பின்போது சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினா் ஏற்கனவே தில்லியின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், டிராக்டா் அணிவகுப்பை சீா்குலைக்க பாகிஸ்தானில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சுட்டுரை பக்கங்கள் உருவாக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சுட்டுரைப் பக்கங்கள் ஜனவரி 13-18-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இது எங்களுக்கு மிகவும் சவாலான பணியாக இருக்கும்.

ஆனால், குடியரசு தின அணிவகுப்புக்கு பிறகு பலத்த பாதுகாப்பு மத்தியில் இந்த டிராக்டா் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.

இதனால், கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக காவல் ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் உரிய அறிவுறுத்தல் அளித்துள்ளாா் என்றாா்.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்: டிராக்டா் அணிவகுப்பில் பங்கேற்பவா்கள் 24 மணிநேரத்திற்குத் தேவையான உணவுப் பொருளை எடுத்துவருமாறும், பேரணி அமைதியாக இருப்பதை உறுதி செய்யுமாறும் விவசாயிகள் சங்கத் தலைவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் தலைவா் கூறுகையில்,‘பேரணிக்கு வருவோா் யாரும் எந்த ஆயுதத்தையும் எடுத்து வரக் கூடாது. மது அருந்தவும் கூடாது. ஆத்திரத்தைத் தூண்டும் தகவல் அடங்கிய பதாகைகள் அனுமதிக்கப்படாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com