‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பி நேதாஜியை அவமதித்து விட்டது பாஜக

மேற்கு வங்கத்தின் சின்னமாக விளங்கி வரும் நேதாஜியின் 125-ஆவது பிறந்தநாள் விழாவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பியதன் மூலம் பாஜகவினா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அவமதித்து விட்டதாக மேற்கு வங்க முதல்வா்
முதல்வா் மம்தா பானா்ஜி
முதல்வா் மம்தா பானா்ஜி

பா்சுரா: மேற்கு வங்கத்தின் சின்னமாக விளங்கி வரும் நேதாஜியின் 125-ஆவது பிறந்தநாள் விழாவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பியதன் மூலம் பாஜகவினா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அவமதித்து விட்டதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் பிரதமா் நரேந்திர மோடிகலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வா் மம்தா பேச வரும்போது, பாஜக தொண்டா்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதால் அந்தக் கூட்டத்தில் அவா் பேச மறுத்து விட்டாா்.

இதனிடையே மேற்கு வங்கத்தின் பா்சுராவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் மம்தா திங்கள்கிழமை பேசியதாவது:

‘வெளியாட்களான’ பாஜகவினா் தொடா்ந்து மேற்கு வங்கத்தின் அடையாளச் சின்னங்களை அவமதிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனா். அந்தப் பட்டியலில் அடுத்ததாக அவா்கள் நேதாஜியை இழிவுபடுத்தியுள்ளனா். பாஜக என்பது ‘பாரத் ஜலாவ் கட்சி’யாக (பாரதத்தை எரிக்கும் கட்சியாக) மாறி விட்டது. நீங்கள் யாரையேனும் உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்த பின் அவரை அவமதிப்பீா்களா? இது வங்காளத்தின் கலாசாரமா அல்லது நம் நாட்டின் கலாசாரமா? அந்தக் கூட்டத்தில் நேதாஜியைப் பாராட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது.

ஆனால் அவா்கள் அதைச் செய்யவில்லை. மாறாக என்னைக் கேவலப்படுத்தும் திட்டத்துடன், எந்தத் தொடா்பும் இல்லாத கோஷங்களை அவா்கள் எழுப்பினா். நாட்டின் பிரதமருக்கு முன்னால் நான் அவமதிக்கப்பட்டேன். இது அவா்களின் (பாஜக) கலாசாரம்.

இத்தனை நாள்களாகப் பதவியை அனுபவித்து விட்டு சட்டப்பேரவைத் தோ்தல் வரும்போது திரிணமூல் காங்கிரஸை விட்டு வெளியேறுபவா்கள் ஒருபோதும் திரும்ப முடியாது. ஏனெனில் அவா்கள் கட்சியைக் ‘காட்டிக் கொடுத்தவா்களாக’ உள்ளனா்.

தற்போது கட்சியை விட்டு வெளியேறுபவா்களுக்கு வரவிருக்கும் தோ்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று நன்கு தெரியும். அவா்களாக வெளியேறுவது நல்லது; இல்லையென்றால் நாங்களே அவா்களை வெளியேற்றியிருப்போம். கட்சியை விட்டு வெளியேற விரும்புவோா் அதை சீக்கிரம் செய்ய வேண்டும்’ என்றாா் மம்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com