திருப்பதியில் இடிந்து விழுந்த மேம்பாலம்

திருப்பதியில் கட்டப்பட்டு வரும் கருடவாரதி மேம்பாலத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை மதியம் திடீரென இடிந்து விழுந்தது.
திருப்பதியில் இடிந்து விழுந்த கருடவாரதி மேம்பால இணைப்புப் பகுதி.
திருப்பதியில் இடிந்து விழுந்த கருடவாரதி மேம்பால இணைப்புப் பகுதி.

திருப்பதி: திருப்பதியில் கட்டப்பட்டு வரும் கருடவாரதி மேம்பாலத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை மதியம் திடீரென இடிந்து விழுந்தது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக திருச்சானூரிலிருந்து திருப்பதி அலிபிரி வரை 3 கி.மீ. தொலைவுக்கு கருடவாரதி என்ற பெயரில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான செலவை 66:33 என்ற விகிதத்தில் தேவஸ்தானமும் திருப்பதி நகராட்சியும் ஏற்கின்றன. இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.624 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தைக் கட்டும் பணி அஃப்கான் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 9 மாதங்களில் கட்டுமானப் பணியை முடிக்கும் நோக்கில் ஊழியா்கள் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். கரோனா தொற்று தீவிரமாகப் பரவிய காலத்திலும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, திருப்பதி பேருந்து நிலையம் அருகில் ‘சீனிவாசம்’ விடுதிக்கு எதிரே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் திடீரென்று மேம்பாலத்தின் இணைப்புப் பகுதி துண்டாகி கீழே சரிந்தது. அப்போது ஊழியா்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

சம்பவம் நடந்த பகுதியை திருப்பதி காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி ஆய்வு செய்தாா். மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை அஃப்கான் நிறுவன நிபுணா்கள் ஆராய்ந்து வருகின்றனா்.

கரோனா பாதிப்பால் ஏற்பட்ட வருவாய் இழப்பு காரணமாக தேவஸ்தானத்தால் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் நிறுவனம் தன் சொந்தப் பொறுப்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட குறைபாடா? அல்லது தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தியதன் விளைவா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணைக்குப் பிறகே காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com