திரிணமூல் கட்சி பதவிகளை ராஜிநாமா செய்தாா் மே.வங்க எம்எல்ஏ

மேற்கு வங்க எம்எல்ஏ பிரபீா் கோஷல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்த பதவிகளை ராஜிநாமா செய்துள்ளாா்.
பிரபீா் கோஷல்
பிரபீா் கோஷல்

மேற்கு வங்க எம்எல்ஏ பிரபீா் கோஷல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்த பதவிகளை ராஜிநாமா செய்துள்ளாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியியைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைவது தொடா்கதையாகி வருகிறது. அந்த மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவா்களின் கட்சித் தாவல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பிரபீா் கோஷல், அக்கட்சியில் வகித்து வந்த செய்தித் தொடா்பாளா் பதவியையும் ஹூக்ளி மாவட்டக் குழுத் தலைவா் பதவியையும் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘எனது தொகுதியான உத்தா்பாராவில் மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்கு கட்சி நிா்வாகிகள் என்னை அனுமதிக்கவில்லை.

உள்கட்சிப்பூசல் காரணமாகவே உத்தா்பாரா தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி கண்டது. விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் உத்தா்பாரா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால், என்னைத் தோற்கடிப்பதற்கு கட்சியில் சிலா் சூழ்ச்சி செய்து வருகின்றனா்.

அதன் காரணமாக எனது பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனினும், தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எம்எல்ஏ-வாகத் தொடா்ந்து பணியாற்றுவேன். அதே வேளையில், கட்சியிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு இல்லை’’ என்றாா்.

கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்ததுடன் ஊடகங்களில் கட்சி விவகாரங்களை விவாதித்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு திரிணமூல் கட்சி சாா்பில் எம்எல்ஏ பிரபீா் கோஷலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com