காஷ்மீர் அரசியல்வாதிகளை துன்புறுத்தும் மத்திய அரசு: மெஹபூபா குற்றச்சாட்டு

காஷ்மீர் அரசியல்வாதிகள் மத்திய அரசால் துன்புறுத்தப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி


ஸ்ரீநகர்: காஷ்மீர் அரசியல்வாதிகள் மத்திய அரசால் துன்புறுத்தப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சுட்டுரையில் கூறியுள்ளதாவது: 
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக வாஹீத் உர் ரஹ்மான் பாரா 2020 நவம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக புல்வாமா மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தற்போது வரை அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் வாஹீத்துக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால், ஜம்மு காஷ்மீர் போலீஸார் அவரை மீண்டும் கைது செய்தனர். 
இந்திய அரசால் தொடர் தடுப்புக் காவலில் வாஹீத் வைக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் அரசியல்வாதிகளின் தற்போதைய நிலையை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. 
ஒருபுறம் இந்திய அரசியலமைப்பை நம்பியதற்காக உள்ளூர் மக்களின் அவநம்பிக்கைக்கு ஆளாகியும், மற்றொருபுறம் இந்திய அரசால் தண்டிக்கப்பட்டும் வருகின்றனர். காஷ்மீரிகள் பலர் முன்வராத போதும், தேசியக் கொடியை ஏற்றியவர் அவரது தாத்தா. அத்தகைய குடும்பத்தின் வழிவந்தவர் வாஹீத்.
அவரது அரசியல் ஆர்வம் இளம் வயதிலேயே தொடங்கியது. தனது குழந்தைப் பருவத்தில் அருகில்  உள்ள சட்டப் பேரவை உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று அரசியல் உரையாடல்களை கவனத்துடன் கேட்டு வந்துள்ளார். 
இவரது அரசியல் ஆர்வத்தால் பயங்கரவாதிகளின் இலக்குக்கு ஆளாகிவிடுவார் என அவரது தாயார் அச்சப்பட்டு வந்தார். வாஹீத் இளைஞராக இருக்கும்போது அந்த அச்சத்தாலேயே அவரது தாயார் உயிரிழந்துவிட்டார். 
எந்த அமைப்பு மீது வாஹீத் நம்பிக்கை கொண்டிருந்தாரோ, அந்த அமைப்பே தற்போது அவரைப் பழிவாங்கி வருகிறது. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் போலீஸாரிடம் இல்லை. ஆனாலும், இந்திய அரசால் அவர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். மேலும், 32 வயது இளைஞரின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலாகும். அவரது இறுதி நம்பிக்கையாக நீதிமன்றம் உள்ளது. எனவே உண்மையும், நீதியும் வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com