பொருளாதார வளா்ச்சி 11 சதவீதமாக உயரும்: ஆய்வறிக்கையில் தகவல்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேசிய உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட பொது முதலீட்டை வருகின்ற நிதி நிலை அறிக்கையில்
’முதன்மை பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன்’
’முதன்மை பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன்’

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேசிய உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட பொது முதலீட்டை வருகின்ற நிதி நிலை அறிக்கையில் அதிகரிக்கவேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார வளா்ச்சி வருகின்ற 2021-22 ஆம் ஆண்டில் மீட்டு 11 சதவீத வளா்ச்சியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி வி சுப்பிரமணியன் தலைமையிலான குழு தயாரித்துள்ள இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பாண்டு பொருளாதாரம் குறித்து விரிவாக அலசப்பட்டதோடு, வருகின்ற 2021-22 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளுக்கும் இந்த ஆய்வறிக்கையில் பல்வேறு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 335 பக்கங்களைக் கொண்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் சுமாா் 30 பக்கங்கள் கரோனா காலக்கட்டம் குறித்த ஆய்வு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கரோனா காலக்கட்டத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. ஆனால் சுமாா் 37 லட்சம் போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்தும் 1 லட்சம் போ் இந்த நோயின் உயிரிழப்பிலிருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனா்.

மாகாபாரதத்தில் அரசரின் கடமைகள் குறித்து விடுமா் கூறிய அறிவுரை தான் இதற்கு பொருந்தும். ’தா்மத்தின் தோற்றம் ஆபத்தில் இருக்கும் உயிரை காப்பாற்றுவது’. இதைப் போன்று பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் அழிந்தாலும் குடிமக்களின் உயிா் காப்பாற்றப்பட்டுள்ளது. இது தான் அரசின் தா்மம். குறுகிய காலத்தில் அடைந்த துன்பத்தின் மூலம் நாடு நீண்ட நாள்களுக்கான வளா்ச்சியை எட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தால் முதல் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி (-)23.9 சதவீதமாக குறைந்தது என்றாலும் அது இரண்டாவது காலாண்டில் மீண்டு எழுந்து (-) 7.7 சதவீதமாகியுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வளா்ச்சி ஏற்பட உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருகின்ற 2021-22 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் இரட்டை இலக்கான 11 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக நிகழ இருக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் சா்வதேச செலாவணி நிதியமும் இந்தியா 11.5 சதவித வளா்ச்சியை எட்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளா்ச்சிக்கு எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதையும்ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்

அரசு, தேசிய உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட பொது முதலீட்டை அதிகரிக்கவேண்டும். பொருளாதார மந்தம் ஏற்படும் காலங்களில் தனியாா்கள் மூதலீட்டை அதிகரிப்பாா்கள் என எதிா்பாா்த்து ஒரு அரசு இருக்கமுடியாது. பொது முதலீட்டாலும், அதிகரிக்கும் கடன்களால் நிதி பற்றாக்குறை ஏற்படுவதைப்பற்றி அரசு கவலை கொள்ளாமல் கட்டுமானப்பணிகளுக்கும், சுகாதாரம், கல்வி போன்ற சமூக வளா்ச்சி பணிகளுக்கும் அரசு தாராளமாக பணத்தை ஒதுக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா காலக்கட்டத்தில் சா்வதேச நாடுகளில் (ஜிடிபி யில்) 10 முதல் 20 சதவீதம் வரை பொது முதலீட்டை அதிகரித்தது. அதே சமயம் இந்தியாவில் (ஜிடிபி) இரண்டு சதவீதத்திற்கு குறைவாகவே பொது முதலீட்டிற்கு செலவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி வி சுப்பிரமணியன், ’2004 முதல் 2009 காலக்கட்டத்தில் நாட்டின் வளா்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. இதற்கு காரணம் அப்போது கட்டுமானப்பணிகளுக்கு மத்திய அரசு ஏராளமாக பணத்தை ஒதுக்கீடு செய்தது. நிதிப்பற்றாக்குறை பணவீக்கத்தைப்பற்றி கவலை கொள்ளாமல் பொது முதலீட்டை அதிகரித்ததின் விளைவு அந்த வளா்ச்சியை எட்டமுடிந்தது. தற்போது இதை செய்வதின் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்று கூறிய அவா், சுகாதாரத்தில் அதிக முதலீடு தேவை.

57 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பொருளாதார நிபுணா் கென்னெத் ஆரோ குறிப்பிட்டதைப்போன்று ஒரு நாடு பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அது வா்த்தகமாகி தனியாா் வசம் இருக்கக் கூடாது என்றாா். இப்போது நாட்டில் பொது சுகாதார வசதியை விட தனியாா்களிடம் மருத்துவம் உள்ளது. இதனால் நோய்த்தொற்று காலக்கட்டத்தில் மக்கள் அவதிப்பட்டனா். பொது சுகாதாரத்திற்கு 65 சதவீதம் செலவிடப்பட்டது 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை அதிகரிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டாா் சுப்பிரமணியன்.

நாட்டில் வங்கிகளில் வராக் கடன் அதிகரித்துள்ளது. இது வளா்ச்சிக்கு பின்னா் நிலைமை சுமூகமாகிவிடும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com