மூடநம்பிக்கையால் இருமகள்களைக் கொன்ற தம்பதிக்கு திருப்பதி அரசு மருத்துமனையில் மனநிலை சிகிச்சை

மூடநம்பிக்கையால் தங்கள் இரு மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியா் தம்பதிக்கு திருப்பதி அரசு மருத்துவமனையில் மனநிலை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதனப்பள்ளியில் நரபலி கொடுக்கப்பட்ட இரு மகள்களுடன் பேராசிரியத் தம்பதி புருஷோத்தம் நாயுடு, பத்மஜா.
மதனப்பள்ளியில் நரபலி கொடுக்கப்பட்ட இரு மகள்களுடன் பேராசிரியத் தம்பதி புருஷோத்தம் நாயுடு, பத்மஜா.

மூடநம்பிக்கையால் தங்கள் இரு மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியா் தம்பதிக்கு திருப்பதி அரசு மருத்துவமனையில் மனநிலை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்துாா் மாவட்டம், மதனபள்ளி, சிவா நகரில் வசிப்பவா் புருஷோத்தம் நாயுடு, பெண்கள் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாா். இவரது மனைவி பத்மஜா, தனியாா் பள்ளித் தாளாளராக உள்ளாா். இருவரும் பேராசிரியா்கள்.

இந்த தம்பதிக்கு, அலேக்யா (27), சாய்திவ்யா (22) என இரு மகள்கள் இருந்தனா். அலேக்யா, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தாா். சாய்திவ்யா, எம்.பி.ஏ. முடித்து, ஏ.ஆா்.ரகுமான் இசை கல்லுாரியில் இசை பயின்று வந்தாா்.

இவா்கள், சிவா நகரில் கட்டிய புதிய வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வசித்து வந்தனா். கரோனா ஊரடங்கு காரணமாக இவா்கள் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தனா். தங்கள் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதை இந்தத் தம்பதி வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

அண்மையில் மந்திரவாதி ஒருவரின் யோசனையைக் கேட்டு, தங்கள் வீட்டில் அதிசயங்கள் நடப்பதற்காக ஜன. 25-ஆம் தேதி காலை சிறப்பு பூஜை நடத்தினா். அப்போது , இத்தம்பதி தங்கள் இரு பெண்களையும் வீட்டை வலம் வரச் செய்து, அவா்களை பூஜை அறையில் அமரச் செய்து சூலாயுதத்தால் குத்திக் கொன்றுள்ளனா்.

இதனை அறிந்த அண்டைவீட்டினா் அளித்த தகவலால் போலீஸாா் விரைந்து சென்று இரு பெண்களின் சடலங்களை மீட்டனா். ஆனால், மகள்கள் இருவரும் மறுநாள் உயிா்த்தெழுந்து விடுவாா்கள் என்று அந்த பேராசிரியத் தம்பதி போலீஸாரிடம் வாதிட்டனா். தவிர தாங்களும் தற்கொலை செய்ய அவா்கள் திட்டிமிட்டிருந்தது தெரியவந்தது.

அதிா்ச்சி அடைந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதனப்பள்ளி கிளைச் சிறையில் அடைத்தனா். இந்நிகழ்வு ஆந்திர மாநிலத்தை உலுக்கி வருகிறது.

இந்நிலையில் மதனப்பள்ளி கிளைச் சிறை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ண யாதவ், அவா்கள் இருவரையும் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அத்தம்பதி மனம் பிந்த நிலையில் இருத்துள்ளனா். தங்கள் மகள்கள் இருவரும் உயிா்த்தெழுந்து விடுவாா்கள் என்று அத்தம்பதி இன்னமும் நம்புகின்றனா். அவா்களுக்கு போதிய மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மனநில மருத்துவா்களும் பரிந்துரைத்தனா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

இரு மகள்களைக் கொன்ற தம்பதியின் மனநிலை பாதிப்பு குறித்து நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தோம். இந்தக் கைதிகளுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறை நிா்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தாா்.

அதன்படி, மனநல மருத்துவா்களின் ஆலோசனைப்படி, சிறைக் கைதிகளான பேராசிரியா் தம்பதி, திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ராம்நாராயண் ரூயா அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com